மேட்டூர் அணை என்ன என் வீட்டுக் குடிநீர்க் குழாயா?- அமைச்சர் துரைக்கண்ணு சர்ச்சைப் பேச்சு

கேட்ட உடனே திறப்பதற்கு மேட்டூர் அணை, என் வீட்டு குடிநீர்க் குழாய் இல்லை என அமைச்சர் துரைக்கண்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

''மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவாக உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அணையைத் திறக்க வேண்டும் எனக் கூறிவருவது வேடிக்கையாக உள்ளது. கேட்கும்போதெல்லாம் திறப்பதற்கு மேட்டூர் அணை என்ன பாக்கெட்டிலா இருக்கிறது? மேட்டூர் அணை என்ன என் வீட்டு குடிநீர்க் குழாயா உடனே திறப்பதற்கு...' என்று சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் துரைக்கண்ணு பேசியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துரைக்கண்ணு

ஜூன் 12-ம் தேதியே திறக்கப்படவேண்டிய மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படவில்லை. குறித்த நேரத்தில் மேட்டூர் அணை திறப்பதற்கு வாய்ப்பில்லை என சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், டெல்டா பகுதி விவசாயிகள் பாசனத்துக்காக மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் என போராட்டம் நடத்தியும், பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். ஏற்கெனவே, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, குறித்த நேரத்தில் பாசனத்துக்குத்  தண்ணீர் திறக்காததால், விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதோடு, வறுமையால் வாழ்க்கையை ஓட்டுவதற்கே தவித்துவருகிறார்கள். இந்த நிலையில், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, 'கேட்கும்போதெல்லாம் திறப்பதற்கு மேட்டூர் அணை என் வீட்டு குடிநீர்க் குழாய் இல்லை' என சர்ச்சைக்குரிய வகையில் பேசி, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியிருகிறார். 

கும்பகோணத்தில், நேற்றிரவு காவிரி நதி நீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா என்ற பெயரில்,  அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் அ.தி.மு.க-வினர் பொதுக் கூட்டம்  நடத்தினர். இதில், கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன், திரைப்பட நடிகர் தியாகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, ''காவிரி நீருக்காகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மறைந்த ஜெயலலிதா பல்வேறு போராட்டங்களை நடத்தினார். 1974-ம் ஆண்டு போடப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை தி.மு.க மீண்டும் புதுப்பிக்காததால்தான் இன்று  காவிரி வறண்டு காணப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவாக உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அணையைத் திறக்க வேண்டும் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. கேட்கும்போதெல்லாம் திறப்பதற்கு மேட்டூர் அணை என்ன பாக்கெட்டிலா இருக்கிறது. மேட்டூர் அணை என்ன என் வீட்டு குடிநீர்க் குழாயா உடனே திறப்பதற்கு?'' என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு, வேளாண் துறை அமைச்சராக  விவசாயிகள் நிலையைப் புரிந்துகொள்ளாமல் இப்படி பேசியது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே  கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'ஜெயலலிதா கொள்ளையடித்தார். அதை தினகரன் எடுத்துக்கொண்டார்' என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதைத் தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணு, மேட்டூர் விஷயத்தில் இதுபோல பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!