வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (20/06/2018)

கடைசி தொடர்பு:19:27 (20/06/2018)

மின்சாரம் தாக்கி குட்டியுடன் பெண் யானை பலி... யாருக்கும் தெரியாமல் மறைத்த வனத்துறை!

மின்சாரம் தாக்கி குட்டியுடன் பெண் யானை பலி.! − யாருக்கும் தெரியாமல் மறைத்த வனத்துறை.!

மின்சாரம் தாக்கி குட்டியுடன் பெண் யானை பலி... யாருக்கும் தெரியாமல் மறைத்த வனத்துறை!

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி குட்டியுடன் பெண் யானை பலியான சம்பம் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. யானை இறந்தது தொடர்பாக எந்த அதிகாரபூர்வ தகவல்களையும் வனத்துறை வெளியிடாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி இறந்தது? என்ன காரணம்?

மேகமலை வனப்பகுதியில் உள்ள வெண்ணியாற்றிற்கு மேற்கு பகுதியில் உயர்மின் அழுத்த மின்சாரக் கம்பி சென்றுகொண்டிருக்கிறது. இந்த மின்சாரக் கம்பி தாழ்வாக இருந்ததால் அந்த வழியாகக் குட்டியுடன் சென்ற பெண் யானை ஒன்று கம்பியில் உரசி, உடலில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலியே குட்டியுடன் பலியாகியுள்ளது. இது தொடர்பாக மேகமலை வனஉயிரின காப்பாளர் கலாநிதியிடம் பேசியபோது, "சுமார் 22வயது மதிக்கத்தக்க பெண் யானையும், 1முதல் 2வயது மதிக்கத்தக்கப் குட்டி யானையும் இறந்திருக்கின்றன. அந்த இடத்திற்கு நேரடியாக நான் சென்று பார்த்தேன். மின்சாரக் கம்பிக்கு நேர் கீழே அவை இறந்து கிடந்தன. இறந்து 20 நாள்கள் ஆகியிருக்கும். எனவே உடல் சிதைந்து காணப்பட்டது. இரண்டு கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். மின்சாரம் தாக்கியதால் இறந்ததா அல்லது வேட்டையாடப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை செய்தோம். மாவட்ட மின்சாரவாரிய அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று, யானை இறந்துகிடந்த  அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதா என விசாரணை செய்தோம். யானை இறந்த நாள், நேரத்தை மருத்துவர்கள் தோராயமாக குறித்துக்கொடுத்தனர். அதன் அடிப்படையில் அந்த நாளுக்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் எனத் தொடர்ந்து நான்கைந்து நாளிற்கு அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதா என விசாரித்த போது, ஒரு நாளில் மின்சாரம் தடைப் பட்டிருக்கிறது. அதனை வைத்து மின்சாரம் தாக்கிதான் யானையும், அதன் குட்டியும் பலியானது எனக் கண்டறிந்தோம். உடனடியாக வனப்பகுதியில் செல்லும் மின்சாரக் கம்பிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை கேட்டிருக்கிறேன். எந்தெந்த பகுதியில் தாழ்வாக மின்சாரக் கம்பி சென்று கொண்டிருக்கிறது எனக் கண்டறிந்து அதனைச் சரிசெய்ய வேண்டும் என மின்சார வாரியத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காது என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.!" என்றார். 

மறைக்க என்ன காரணம்?

"தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை எப்போதும் வனத்துறைக்கும் மக்களுக்கும் இடையே சச்சரவுகள் இருந்துகொண்டேயிருக்கிறது. இப்படியான சூழலில் வனத்திற்குள் யானை இறந்த செய்தியை மக்களுக்கோ, பத்திரிக்கையாளர்களுக்கோ அல்லது எங்களுக்கோ கூட தெரிவிக்காமல் வனத்துறை அதனை மூடி மறைக்க முயற்சி செய்திருக்கிறது. ஒரு யானை இறந்திருக்கிறது என்றால், வனவிலங்கு ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களுக்கு அதிகாரபூர்வமாக தகவல் தெரிவித்து, அவர்கள் உடன் இருக்கும் போது தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதனை தான் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வன அதிகாரிகள் பின்பற்றுகிறார்கள். ஆனால், தேனி மாவட்டத்தில் இதுவரை அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. இதுபோன்று வனத்துறை நடந்துகொள்வது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இறந்தது பெண் யானை என இப்போது சொல்கிறார்கள். மேகமலை வனப்பகுதியில் தந்தத்திற்காக யானைகள் வேட்டையாடப்படுவது வாடிக்கை. அப்படி இருக்க யானை இறந்ததை வனத்துறை மறைத்தால், இறந்தது ஆண் யானை என்றும், தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டது என்றும்  நினைக்கத்தோன்றுகிறது. இனியாவது வனத்துறை ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும்.!" என அழுத்தமாக பேசுகிறார்கள் தேனி மாவட்ட வனவிலங்கு ஆர்வலர்கள்.

யானை

இது தொடர்பாக கலாநிதியிடம் கேட்ட போது, "அவர்களின் கோரிக்கை நியாயமானது தான். மற்ற மாவட்டங்களில் அப்படி தான் நடக்கிறது. தேனி மாவட்டத்தில் இப்படி ஒரு சூழல் இருப்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. நான் இங்கு வந்து இண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல், பத்திரிகையாளர்கள், வனவிலங்கு ஆர்வலர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படும். இனி அனைவரிடமும் ஒரு சுமூக உறவு பேணப்படும்.!" என்றார்.

அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினம் யானை. அதனை பாதுகாக்கும் நோக்கோடு நடந்துகொள்ள வேண்டிய வனத்துறை யானை இறந்ததை மறைக்க முயன்றது வேதனையளிக்கிறது. இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வனம் தொடர்பாக வெளிப்படையாக நடந்து கொண்டால் மக்களுக்கு வனத்துறை மீது நம்பிக்கை ஏற்படும் என்பதில் ஐயமில்லை.