வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (20/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (20/06/2018)

'தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர்!' - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில், பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்த நபர்கள் ஊடுருவி இருப்பதாகப் பேசியிருக்கிறார், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். 

பொன். ராதாகிருஷ்ணன்

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், `ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த நபர்கள் ஊடுருவினார்கள்  என ஓராண்டு காலமாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். இதை அரசும் காவல்துறையும் உளவுத்துறையும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிட்டது. ஆனால், இதன்விளைவை இப்போது அனுபவித்துவருகின்றனர். பயங்கரவாதத்தைத் தடுக்க தமிழக அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது? ஊடகங்களுக்கும் பெரிய சவாலாகப் பயங்கரவாதிகள் இருக்கப்போகிறார்கள்.

நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள், தமிழ்ப் பெயர் சொல்லிப் பிரிவினைவாதங்களைத் தூண்டிக்கொண்டிருக்கும் சில அமைப்பினர், பல அமைப்புகளுக்குள் ஊடுருவியுள்ளனர். ஊடகங்களிலும் ஊடுருவி இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, தமிழக அரசு விரைந்து செயல்படவில்லை என்றால், தமிழக மக்கள் பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்த வேண்டும். சர்வ அதிகாரத்தையும் பயன்படுத்த முடியவில்லை என்று சொன்னால், ஆட்சி செய்வதில் அர்த்தம் இல்லை. போராட்டங்களில் சாதாரணமாகப் போராடுகிறார்களா? சதியோடு போராடுகிறார்களா என்று கவனிக்க வேண்டும். இதுவும், முதலமைச்சரின் வேலைகளில் ஒன்று' என்றார்.