வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (20/06/2018)

கடைசி தொடர்பு:18:15 (20/06/2018)

சென்றது மீன்பிடிக்க... சொன்னது கடத்தல் தொழில்... இரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்கள்

இரானுக்கு மீன்பிடித் தொழில் செய்ய அழைத்துச்செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரை கடத்தல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு மறுத்ததால், அவர்கள் பாஸ்போர்ட்டை பறிமுதல்செய்து, நாடு திரும்ப விடாமல் அலைக்கழிப்பதாக உறவினர்கள் கதறலுடன் தெரிவித்தனர்.

இரானுக்கு மீன்பிடித் தொழில் செய்ய அழைத்துச்செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரை கடத்தல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு மறுத்ததால், அவர்களின் பாஸ்போன்ட்டை பறிமுதல்செய்து, நாடு திரும்ப விடாமல் அலைக்கழிப்பதாக உறவினர்கள் கதறலுடன் தெரிவித்தனர். 

மீனவர்கள் உறவினர் கோரிக்கை

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள்,  இரான் நாட்டின் நகில்டகு என்ற இடத்தில் மீன் பிடிக்கும் தொழிலுக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்களை குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவர் புரோக்கராகச் செயல்பட்டு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அனுப்பிவைத்துள்ளார்.  இரான் நாட்டைச் சேர்ந்த முகமது சால் என்பவரது விசைப்படகில் அவர்களுக்கு வேலை கிடைத்தது.

அங்கு சென்ற பின்னர், அவர்களை மீன்பிடித் தொழிலுக்கு அனுப்பாமல், கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். தாங்கள் பிடிபட்டால் கடுமையான தண்டனைக்கு உள்ளாவோம் என்பதை அறிந்த தமிழக மீனவர்கள், கடத்தல் தொழில் செய்ய மறுத்துவிட்டனர். அதனால், ஆத்திரமடைந்த இயந்திரப் படகின் உரிமையாளர்,  அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களைப் பிடுங்கி வைத்துக்கொண்டார். அதனால், அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல், அதிகாரிகளின் கண்ணில் படாமல் அகதிகள் போல சாலையோரத்தில் தங்கியிருத்துவருவதாக உறவினர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. கையில் பணம் இல்லாமல் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நெல்லை மாவட்ட கடற்கரை கிராமமான பெருமணல் பகுதியைச் சேர்ந்த சந்தியாகு விஜய், சுமன், விக்னேஷ், ராயப்பன் மற்றும் கூட்டப்பனையைச் சேர்ந்த மிக்கேல், மார்க் ஆகிய 6 பேர்  இரானில் தவித்துவருகிறார்கள். 

இது தவிர, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், அவர்களை மீட்டு தாயகம் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. நெல்லை மாவட்ட மீனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து, தங்களுடைய உறவினர்களை பத்திரமாக மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.