வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (20/06/2018)

கடைசி தொடர்பு:17:44 (20/06/2018)

ஒரு பக்கம் ஸ்டார்மிங் ஆபரேஷன்... மறுபக்கம் திருட்டு... போலீஸை தெறிக்கவிட்ட இரானிய கொள்ளையர்கள்

திருட்டு பைக்கில் தில்லாகச் சென்று, சென்னையில் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்ட  இரானியக் கொள்ளையர்கள், தொப்பியால் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டனர். 

கொள்ளையர்கள்

சென்னையில் செயின், செல்போன் எனத் தொடர்ந்து வழிப்பறிச் சம்பவங்கள் நடந்தன. இதைத் தடுக்க ஸ்டார்மிங் ஆபரேஷனில் போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர். போலீஸாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி, நேற்று ஒரே நாளில் 44 சவரன் நகைகளைக் கொள்ளையர்கள் வழிப்பறிசெய்தனர். இதனால், போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். வழிப்பறிக் கொள்ளையர்களைப் பிடிக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், வழிப்பறிச் சம்பவங்கள்குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். சிசிடிவி பதிவுக் காட்சிகளையும் ஆய்வுசெய்தனர். வழிப்பறிச் சம்பவத்துக்குப் பயன்படுத்தியது திருட்டு பைக் என்பதை போலீஸார் முதலில் கண்டுபிடித்தனர். அதன்பிறகு, கொள்ளையர்கள்குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்தனர். தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் வியூகம் அமைத்தனர். போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் வழிப்பறிக் கொள்ளையர்கள், ஆந்திர எல்லையில் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்த தங்க நகைகளை போலீஸார் பறிமுதல்செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னையில் நடந்த தொடர் வழிப்பறி சம்பவங்களைத் தடுக்கத்தான் வாகனச் சோதனை நடந்துவருகிறது. அதில், 3,500-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். நீண்ட காலமாக தலைமறைவுக் குற்றவாளிகளும் பிடிப்பட்டுள்ளனர். தொடர்ந்து விடிய விடிய இந்தச் சோதனையில் ஈடுபட்டுவருகிறோம். அப்படியிருந்தும், நேற்று ஒரே நாளில் மட்டும் புளியந்தோப்பு, ராயப்பேட்டை, திருமங்கலம், புழல், மாதவரம் ஆகிய பகுதிகளில் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 வழிப்பறி நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தோம். அப்போது, பைக்கில் செல்லும் கொள்ளையர்கள் அணிந்திருந்த தொப்பிமூலம், அவர்கள்  இரானியக் கொள்ளையர்கள் என்பது எங்களுக்குத் தெரிந்தது. இதனால், அவர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தோம். அதோடு, நேற்று நடந்த வழிப்பறிச் சம்பவங்களில் கிடைத்த முக்கிய தகவல்களின் அடிப்படையில் கொள்ளையர்களைப் பின்தொடர்ந்தோம். அப்போது, கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக், மாதவரத்தில் அநாதையாக நிற்பது தெரிந்தது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தோம். அப்போது, கொள்ளையர்கள் காரில் ஆந்திராவை நோக்கிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றியிருந்தன.

கர்னூல் சுங்கச்சாவடி பகுதியில்  கொள்ளையர்களின் காரை மடக்கினோம். அதில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அப்பாஸ் தவ்ஹித், நவாப் உள்பட 5 பேர் இருந்தனர். அவர்களைப் பிடித்து சென்னைக்கு அழைத்துவந்தோம். விசாரணையில், சென்னையில் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டது  இரானியக் கொள்ளையர்கள் என்று தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன" என்றனர்.

 இரானியக் கொள்ளையர்களின் பயோ டேட்டா

இந்தக் கொள்ளையர்களின் பூர்வீகம்  இரான். 1970-களில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர், அங்கிருந்து குடிபெயர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம், அம்பிவேலியில் குடியேறினர். பிறகு ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் காரமடை, திருப்பத்தூர், மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் வசித்துவருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் வழிப்பறி என்கின்றனர் போலீஸார். பெரும்பாலும் போலீஸ் அதிகாரிகள் கெட்டப்பில் கொள்ளையடிப்பதே  இரானியக் கொள்ளையர்களின் ஸ்டைல். மேலும், மகாராஷ்டிராவிலிருந்து விமானத்தில் வந்து கொள்ளையடித்துவிட்டு, மீண்டும் விமானத்திலேயே செல்வதுண்டு. தற்போது, காரில் வந்து சென்னையில் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளும் இவர்கள் சரளமாகப் பேசுவார்கள்.