`இந்தியாவில் எத்தனை பேரிடம் துப்பாக்கி உள்ளது?' - அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்ட ஐ.நா | Indian citizens own 7.11 crore guns Says U.N. Report

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (20/06/2018)

கடைசி தொடர்பு:19:15 (20/06/2018)

`இந்தியாவில் எத்தனை பேரிடம் துப்பாக்கி உள்ளது?' - அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்ட ஐ.நா

உலகம் முழுவதும் அதிகமாகத் துப்பாக்கிகள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலை ஐ.நா வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர், மக்கள் உட்பட  அனைவரும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகளை வைத்திருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இந்தியா

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி சர்வதேச அளவில் மொத்தமாக 100 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் பொதுமக்கள் மட்டும் சுமார் 85.7 கோடி  துப்பாக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். பாதுகாப்புப் படையினர், ராணுவ வீரர்கள் மட்டும் 13.3 கோடி துப்பாக்கிகளும் காவல் துறையினர் 2.27 கோடி துப்பாக்கிகளும் வைத்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. 

அதிகமாகத் துப்பாக்கிகள் வைத்துள்ள ராணுவம் கொண்ட நாடுகளின்  பட்டியலில் ரஷ்யா முதல் இடத்திலும், சீனா, உக்ரைன் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இதே போன்று காவல் துறையினர் அதிகமாகத் துப்பாக்கிகள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலிலும் ரஷ்யா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சீனா, இந்தியா, எகிப்து ஆகிய நாடுகள் அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

அதைத் தொடர்ந்து சட்டபூர்வமாகவும் சட்ட விரோதமாகவும் அதிக துப்பாக்கிகள் வைத்திருக்கும் மக்கள் கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு மட்டும் 39.3 கோடி துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. 7.11 கோடி துப்பாக்கிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீன மக்களிடம் 4.97 கோடி துப்பாக்கிகளும் பாகிஸ்தான் மக்களிடம் 4.39 கோடி துப்பாக்கிகளும் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.