வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (20/06/2018)

கடைசி தொடர்பு:19:00 (20/06/2018)

கோவையில் கொடிகட்டிப் பறக்கும் குட்கா வியாபாரம்! - சிக்கிக்கொண்ட வட இந்தியர்

கோவை கருமத்தம்பட்டியில், வட இந்தியருக்குச் சொந்தமான மளிகைக் கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை கருமத்தம்பட்டியில், வட இந்தியருக்குச் சொந்தமான மளிகைக் கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குட்கா

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில், சட்ட விரோத மது விற்பனை, தடை செய்யப்பட்ட பொருள்களின் விற்பனை, ஆளுங்கட்சியின் ஆதரவுடன் கொடிகட்டிப் பறக்கிறது. இதை எதிர்த்து பொது மக்கள் பல்வேறு வகையில் போராடி வருகின்றனர். இந்நிலையில், கருமத்தம்பட்டியில் செயல்பட்டு வரும் `கிருஷ்ணா ஸ்டோர்ஸ்' ஆஷா பூரி ஸ்டோர் என்ற மளிகைக் கடையில் பான்பராக், மாணிக்சந்த், ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, சூலூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் மற்றும் அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர், அந்தக் கடையில் சோதனை நடத்தினர். அதில், சுமார் ரூ.10,000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர், அந்தப் பொருள்கள் ஒதுக்குப்புறமாகக் கொட்டப்பட்டு, கடையின் உரிமையாளரான, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் என்பவரால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதுகுறித்து அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கதின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் "கருமத்தம்பட்டி காவல்நிலைய எல்லைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா , கஞ்சா, வெளி மாநில லாட்டரி சீட்டுகள், போலி மதுபானங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராகப் பல முறை புகார் கொடுத்தும் காவல்துறை, முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இளம் தலைமுறையினரை சீரழிக்கும் இது போன்ற பொருள்களின் சட்டவிரோத விற்பனை தடுக்கப்படாவிட்டால், விரைவில் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்" என்றார்.