`தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் | People in Theni village complaints about drainage system

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (20/06/2018)

கடைசி தொடர்பு:20:00 (20/06/2018)

`தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள்

தெருவில் ஓடும் சாக்கடை! - இது மார்க்கையன்கோட்டை பேரூராட்சி.

தேனி மாவட்டம், சின்னமனூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மார்க்கையன்கோட்டை பேரூராட்சி. இங்கு சுகாதார சீர்கேட்டால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகத் தகவல் வெளியானது. இது குறித்து விசாரணையில் இறங்கினோம். சுமார் 10,000 பேர் வசிக்கும் மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சாக்கடைத் தண்ணீர் தெருக்களில் பாய்ந்து செல்வதாகச் சொல்லும் அப்பகுதி மக்கள், "மார்க்கையன்கோட்டையில் மொத்தம் 13 வார்டு. அனைத்து வார்டு பகுதிகளிலும் ஒவ்வொரு பிரச்னை. ஒன்பது, 10வது வார்டு பகுதிகளில் தெருவில் தேங்கியுள்ள சாக்கடை தண்ணீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாக்கடை

தெருவில் இறங்கி நடக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. கொசுத் தொல்லை தாங்கமுடியவில்லை. சரி செய்யுங்கள் என அதிகாரிகளிடம் பல முறை சொல்லியும் எந்தப் பலனும் இல்லை. போதாக்குறைக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து சாலையோரமுள்ள கடைகள், கட்டடங்கள் இடித்ததோடு சாக்கடையையும் இடித்துவிட்டனர். சரி இடித்தார்கள். ஆனால், இன்றுவரை சாலை அமைக்கவில்லை. கடைகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது" என அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டினர். ''பேரூராட்சி நிர்வாகம் உடனே இந்த விஷயத்தில் தலையிட்டு தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும்'' என கோரிக்கை வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.