வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (20/06/2018)

கடைசி தொடர்பு:19:00 (20/06/2018)

`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி 

நடிகை நிலானி

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடுகுறித்து கடுமையாக விமர்சித்த நடிகை நிலானியை குன்னூரில் போலீஸார் கைதுசெய்தனர். 

 ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூடுகுறித்து சீரியல் நடிகை நிலானி விமர்சித்து வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டிருந்தார். அது, சமூக வலைதளத்தில் வைரலானது. இதுதொடர்பாக வடபழனி போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, அவர் தலைமறைவாகவே இருந்தார். அவரின் செல்போன் நம்பரும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. 

 இதையடுத்து, நிலானியை வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் தனிப்படை போலீஸார் தேடினர். அவர், குன்னூரில் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீஸார் நேற்றிரவு குன்னூருக்குச் சென்றனர். அங்கு, நிலானியின் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த இடத்துக்குச் சென்ற போலீஸார், நிலானியிடம் விசாரித்தனர். அப்போது அவர்,  அந்த வீடியோ பதிவுக்கு போலீஸாரிடம்  வருத்தம் தெரிவித்துள்ளார். அதோடு, போலீஸாரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவர் ஒத்துழைப்புக் கொடுத்தார்.  ஸ்டெர்லைட் விவகாரத்தில், `ஆவேசத்தில் அவ்வாறு பேசிவிட்டேன். வழக்கை சட்டப்படி சந்திக்கத் தயாராக உள்ளேன் 'என்று கூறியிருக்கிறார். குன்னூரிலிருந்து அவரை சென்னைக்கு அழைத்துவர உள்ளனர்.