மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கு பொன்.ராதாகிருஷ்ணனே காரணம்... செங்கிப்பட்டி போராட்டக்குழு குற்றச்சாட்டு! | pon.radhakrishnan is main reson for setting up aiims in madurai says thanjai protester

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (20/06/2018)

கடைசி தொடர்பு:20:30 (20/06/2018)

மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கு பொன்.ராதாகிருஷ்ணனே காரணம்... செங்கிப்பட்டி போராட்டக்குழு குற்றச்சாட்டு!

எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை தோப்பூரில் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறது அரசு. செங்கிப்பட்டிதான் எய்ம்ஸ் அமைவதற்கு ஏற்ற இடம். எய்ம்ஸ் விதிகளுக்கு உட்பட்ட இடம் என்பதாலும் இங்குதான் அமைய வேண்டும் எனப் பல போராட்டங்களை நடத்தினார்கள் தஞ்சாவூர் மக்கள். இந்த நிலையில், மதுரையில் அமைய உள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, இதற்குக் காரணம் பொன்.ராதாகிருஷ்ணன் தான் என்ற குற்றச்சாட்டையும் கூறுகிறார்கள் தஞ்சாவூர் எய்ம்ஸ் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

பொன் ராதாகிருஷ்ணன்


மத்திய அரசு, கடந்த 2014-ம் ஆண்டு அனைத்து மாநிலத்திலும் எய்ம்ஸ் மருத்தவமனை அமைக்கப்படும் என அறிவித்து, அதற்காக இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியது. இதன்படி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்குச் சரியான இடத்தைத் தேர்வுசெய்வதற்காகக் குழுவை அனுப்பி ஆய்வுசெய்யவைத்தது தமிழக அரசு. செங்கல்பட்டு, ஈரோடு, மதுரை, புதுக்கோட்டை, செங்கிப்பட்டி போன்ற 5 இடங்களில் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். மேலும், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் எந்தச் சிக்கலும் இல்லாத சமன்படுத்தப்பட்ட அரசு  நிலம், அதுவும் ஒரே இடத்தில் 216 ஏக்கர் நிலமும் கொண்டதோடு, எய்ம்ஸ் விதிகளுக்கு உட்பட்டு அனைத்து வசதிகளையும்கொண்ட இடமாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்ததோடு, செங்கிப்பட்டிதான் எய்ம்ஸ் அமைவதற்குச் சரியான இடம் என கூறிச் சென்றனர்.

குழுவினர் இதை தமிழக அரசிடம் தெரிவித்து வந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில்தான் அமையும் எனச் சில மாதங்களுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள் தெரிவித்துவந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எய்ம்ஸ் மதுரைக்குத்தான் கொண்டுவரப்படும் எனக் கூறிவந்தார்.

இதற்கிடையில், செங்கிப்பட்டியில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என தஞ்சாவூரில் எய்ம்ஸ் மருத்துக் கல்லூரி மருத்துவமனை என்ற போராட்டக் குழுவை ஆரம்பித்து, அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் எனப் பல வகையில் போராடி வந்தனர். பிரதமர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை, ஆளுநர் என அனைவருக்கும் மனு அனுப்பினர்.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் உயர் நீதிமன்றக் கிளையில் எய்ம்ஸ் எந்த இடத்தில் அமைய உள்ளது எனப் பொதுநல வழக்குத் தொடுத்தார்.  அதன் பிறகுதான், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைகிறது என அறிவித்துள்ளார். இது குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் மதிவாணனிடம் பேசினோம்,   ``மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, மகிழ்ச்சியும் அடைகிறோம். தமிழகத்தின் மையப் பகுதி, ரயில், விமானம், பேருந்து வசதி மற்றும் இயற்கையான காற்றோட்டம், மின்சாரம் எனப் பல வகையில் எய்ம்ஸ் விதிக்குட்பட்ட இடமான செக்கிபட்டியைத் தேர்வு செய்யாதது மிகுந்த வேதனை. இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே அரசியல் தலையீடுகள் இருந்துவந்தன. அதேபோல, எய்ம்ஸ் மதுரைக்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டது. இதற்கு முக்கிய காரணம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தான் காரணம். இந்த விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள்குறித்து போராட்டக் குழுக்கள் ஒன்றுகூடி முடிவுசெய்வோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close