கோவில்பட்டியில் ரூ.50 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்

தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ரூ.50 கோடி மதிப்புள்ள தீப்பெட்டிப் பண்டல்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் கோவில்பட்டி குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளது. 

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, கயத்தார், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, ஏழாயிரம்பண்ணை, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், தருமபுரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது.

வட மாநிலங்களுக்கு தரைமார்க்கமாக லாரிகள் மூலமாகவும் வெளி நாடுகளுக்கு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மூலமாகவும் தீப்பெட்டி பண்டல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக மூலப்பொருள்களின் விலையேற்றம், தீப்பெட்டி பண்டல்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்ற காரணத்தால் நலிவடைந்து வந்த இந்தத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கடந்த 3 நாள்களாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தீப்பெட்டி பண்டல்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், "இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டு வருகிறது. கடந்த 3 தினங்களில் மட்டும் சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் குடோன்களில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் தொடர்ந்தால், ஆலைகளை மூடிவிட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறை விடுவதைத் தவிர வேற வழியில்லை" என்றார். 

இதனால் சுமார் 6 லட்சம் நேர்முக மற்றும் மறைமுகத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழில் மட்டுமின்றி டிரான்ஸ்போர்ட் தொழிலும் முடங்கிப்போய் உள்ளது. ஏற்கெனவே புக்கிங் செய்தவர்களுக்கும் பண்டல்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!