வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (20/06/2018)

கடைசி தொடர்பு:19:48 (20/06/2018)

`சேலம் பசுமைச் சாலை திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு' - செல்லூர் ராஜு பேச்சால் சர்ச்சை!

8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினே ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செல்லூர் ராஜூ

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், திருச்சி கே.கே.நகர் தென்றல் நகரில் அமைக்கப்பட்டுள்ள 63-வது கூட்டுறவு வங் கிளையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் சகிதமாக குத்துவிளக்கேற்றி கூட்டுறவு வங்கிக் கிளையைத் திறந்துவைத்த செல்லூர் ராஜு பத்திரிகையாளர்களிடம் பேசினார். 

அப்போது, ``அம்மாவின் வழியில் நடக்கும் அ.தி.மு.க ஆட்சியில் இதுவரை 104 கூட்டுறவு வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 23 மாவட்ட வங்கிகள் மற்றும் 848 கிளைகள் உள்ளன. வரலாறு காணாத அளவுக்கு ரூ.27 ஆயிரத்து 750 கோடி கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் ‘டெபாசிட்’ செய்துள்ளனர். இதன்மூலம் நகைக்கடன், பயிர்க்கடன், வாகனக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த வருடம் விவசாயக் கடனுக்காக 8 ஆயிரம் கோடி ரூபாய் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார். கடன் வழங்குவது தொடர்பாக டெல்டா மாவட்டங்களில் ஆய்வுசெய்ய உள்ளேன். 8 ஆயிரம் கோடியில் இதுவரை ரூ.500 கோடிக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தங்குதடையின்றியும், பாரபட்சமில்லாமலும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாகச் சேர்ந்த உறுப்பினருக்கு 30 சதவிகிதமும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடு செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகளைத் தடுக்க, ஊழல் கண்காணிப்புக்  குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது. தி.மு.க ஆட்சியில் நடந்தது போல அல்லாமல், தற்போது முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள்மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டுள்ளதோடு பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டம் பற்றிய உண்மைநிலை மக்களுக்குத் தெரியும். முதல்வரின் விளக்கத்தைக் கேட்டு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினே ஆதரவு தெரிவித்துவிட்டார். சில சுயநலவாதிகள் தங்களை பிரபலப்படுத்துவதற்காக அத்திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தைத் தூண்டிவிடுகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு 8 வழி பசுமைச் சாலை உறுதுணையாக இருக்கும்'' என்றார். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க