`மாதந்தோறும் 10 லட்சம் கிலோ அரிசி, சர்க்கரை வீண்’ - எலித் தொல்லையால் ரேஷன் கடைகளில் நிகழும் அவலம் | 10 lakh kg of rice and sugar waste by of rat nuisance in ration shop

வெளியிடப்பட்ட நேரம்: 22:05 (20/06/2018)

கடைசி தொடர்பு:22:05 (20/06/2018)

`மாதந்தோறும் 10 லட்சம் கிலோ அரிசி, சர்க்கரை வீண்’ - எலித் தொல்லையால் ரேஷன் கடைகளில் நிகழும் அவலம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதந்தோறும் வீணாகும் பொருள்களின் மொத்த அளவு 10 லட்சத்தைத் தாண்டிவிட்டதாக அபயக்குரல் எழுப்புகிறார்

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் எலித் தொல்லையால் பல லட்சம் கிலோ அரிசி, சர்க்கரை சேதமடைகின்றன. இவற்றைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக நோக்கம் கொண்ட ஊழியர்கள் வலியுறுத்துகிறார்கள். 

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகள் மிகவும் பழுதடைந்த கட்டடங்களில்தான் செயல்பட்டு வருகின்றன. இதனால் இக்கடைகளில் கடந்த சில ஆண்டுகளாக எலித் தொல்லையால் ஏராளமான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் யாருக்கும் பயன் இல்லாமல் குப்பையில் வீசப்படும் அவலம் நிலவுகிறது. பழுதடைந்த சுவர்களில் ஓட்டைபோட்டு ரேஷன் கடைக்குள் வரும் எலிகள், இங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரிசி, சர்க்கரை மூட்டைகளைக் கடித்துக் குதறி நாசப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு கடையிலும் மாதத்துக்குக் குறைந்தபட்சம் 50 - 100 கிலோ அளவுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை வீணாகிறது. தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையின் மூலம் 20,000 ரேஷன் கடைகளும் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 2,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. 

 ``இவற்றில் பெரும்பாலானவை மிகவும் பழைய கட்டடத்தில் செயல்படுகின்றன. இதுதவிர ஒருசில கடைகள் மட்டுமே சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களில் செயல்படுகின்றன. இங்கும் அவ்வப்போது எலிகள் உள்ளே புகுந்து மூட்டைகளைக் கடித்துக் குதறி இங்குள்ள பொருள்களை நாசப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதந்தோறும் வீணாகும் பொருள்களின் மொத்த அளவு 10 லட்சத்தைத் தாண்டிவிட்டதாக அபயக்குரல் எழுப்புகிறார் ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர். இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் உள்ள எல்லா ரேஷன் கடைகள்லயும் எலி பெட்டி வாங்கி வைத்தாலே போதும். இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்த்துடலாம்” என்றார். இக்கோரிக்கையைத் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் ஒன்றாக இணைந்து உடனடியாகத் தீர்க்க வேண்டும். ரேஷன் கடைகளை நம்பியிருக்கும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்கள் முறையாகக் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.