`மதுரை எய்ம்ஸ் எப்படி இருக்க வேண்டும்?’ - டாக்டர்கள் சொல்லும் யோசனை!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது எனும் அறிவிப்பை வரவேற்றுள்ள சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம், அது எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளது. 

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீத்திரநாத் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என மத்திய அரசு காலதாமதமாக அறிவித்திருந்தாலும் வரவேற்கத்தக்கது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, தற்போதுதான் இடமே முடிவாகியுள்ளது. மத்திய அரசு மிகவும் காலதாமதமாக இடத்தைத் தேர்வுசெய்தது வருந்தத்தக்கது. இந்நிறுவனம் நிறுவப்படுவதை, மேலும் காலதாமதப்படுத்தாமல், கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்திட வேண்டும். இந்நிறுவனம் மதுரையில் தொடங்கப்படுவதை, மத்திய மாநில அமைச்சர்களும் தமிழக பா.ஜ.க தலைவர்களும் வாக்குவங்கி அரசியலாக மாற்றுவதைக் கைவிட வேண்டும். 

* அனைத்து உயர் சிறப்பு மருத்துவ வசதிகளும், நவீன மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப வசதிகளும் உடைய உலகத் தரம்வாய்ந்த மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையமாக, இந்நிறுவனத்தை அமைத்திட வேண்டும்.

* 250 இளநிலை மருத்துவ இடங்கள் (எம்.பி.பி.எஸ்) உள்ளதாக இந்நிறுவனத்தை தொடங்கிட வேண்டும். 

* மருத்துவக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 65 விழுக்காட்டை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கிட வேண்டும்.

* எய்ம்ஸ் மாணவர் சேர்க்கைக்குத் தொடர்ந்து தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்திவருவதைக் கைவிட்டு, நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மத்திய அரசு நடத்திட வேண்டும்.

* எய்ம்ஸில் எம்.பி.பி்.எஸ் படிப்பவர்களுக்கு அந்நிறுவனத்தில் முதுநிலை மருத்துவம் பயில தனி ஒதுக்கீடு ( நிறுவன உள் ஒதுக்கீடு) வழங்குவதைக் கைவிட வேண்டும்.

* எய்ம்ஸில் படிப்பவர்கள் அனைவரும் வேலைவாய்ப்புக்கு நேரடியாக எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்திருப்பதை கைவிட வேண்டும்.

* எய்ம்ஸில் சிகிச்சையை ஏழை நோயாளிகளுக்கு முழுமையாக, இலவசமாக வழங்கிட வேண்டும். பயனாளிகளிடம் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும்.

* எய்ம்ஸ் நிறுவனங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்.

* எய்ம்ஸில் மேற்கொள்ளப்படும் மருத்துவ ஆராய்ச்சியை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தை அதிக அளவில் பாதிக்கும் டெங்கு, எலிக்காய்சல் உட்பட்ட நோய்கள் குறித்து, மதுரை எய்ம்ஸில் ஆராய வசதிகள் செய்திட முன்வர வேண்டும்.

மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் 82 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால், அதில் ஒன்றுகூட தமிழகத்துக்கு ஒதுக்கப்படவில்லை. இது கண்டனத்துக்குரியது. எனவே, தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிட மத்திய அரசு , தமிழக அரசுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட வேண்டும்” என்று இரவீந்திரநாத் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!