வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (20/06/2018)

கடைசி தொடர்பு:21:05 (20/06/2018)

`எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையை தவறாகவே பயன்படுத்துகிறது' - உயர் நீதிமன்றம்!

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையை தவறாகப் பயன்படுத்துவதாக உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையை தவறாகப் பயன்படுத்துவதாக உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நீதிமன்றம்

காவல்துறையினர் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, இன்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி, காவலர்கள் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், உயர் அதிகாரிகளுக்கு உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள காவலர்களைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த விசாரணையின்போது பேசிய நீதிபதி கிருபாகரன், காவல்துறையில் இருப்பவர்களை காவல் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார்.  ராமநாதபுரத்தில் காவலரைத் தாக்கிய ரவுடியை, அமைச்சர் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகத் தகவல்வருகிறது. இதற்கு காவலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்று கூறிய அவர், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், காவல்துறையை தவறாகப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

உயர்அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு உதவியாளர்களை நியமிக்க வேண்டுமே தவிர, காவலர்களைப் பயன்படுத்தக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், சமூக ஆர்வலர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள், சமூகத்துக்கு என்ன செய்தார்கள் என அவர் கேள்வி எழுப்பினார். நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பவர்கள்மீது காவல்துறையோ, வழக்கறிஞர்களோ, எந்தப் புகாரும் அளிக்காதது அவமானகரமானது என நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்தார். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அரசு வழங்கிய கார்களை அவர்களது குடும்பத்தினர் பயன்படுத்திவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அவர், நான் இதுவரை சொந்தமாக ஒரு கார்கூட வாங்கவில்லை, ஓய்வுபெற்ற பிறகு ஆட்டோவில்தான் பயணம் செய்வேன் என நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.