வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (21/06/2018)

கடைசி தொடர்பு:00:00 (21/06/2018)

சம்பளம் கேட்டதற்காக விரட்டியடிப்பு - இரானில் தவிக்கும் மீனவர்களை மீட்டுத் தர உறவினர்கள் கோரிக்கை

சம்பளப்  பணம் கேட்டதற்காகத் தெருவில் விரட்டியடிக்கப்பட்டு, வெளிநாட்டில் உணவின்றித் தவிக்கும் தூத்துக்குடி மீனவர்களை மீட்டுத் தரக் கோரி, அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கண்ணீருடன் மனு அளித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டினம் மற்றும் பெரியதாழை ஆகிய மீனவப் பகுதிகளைச் சேர்ந்த பெனிட்டோ, சேவியர், ஃபெர்னாண்டஸ், விக்டர், பிரசாந்த், அஜில்டன் மற்றும் ஆரோக்கியராஜ் ஆகியோர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சகாயராஜ் மற்றும் அந்தோணி என்பவர்கள் மூலமாக, இரான் நாட்டில் மீன்பிடி வேலைபார்ப்பதற்காகச் சென்றனர். 

இவர்களுடன், நெல்லை, நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மேலும் 15 பேர் உடன் சென்றனர். இவர்கள் அனைவரும் இரானைச் சேர்ந்த மும்மது சலா என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில், கடந்த 6 மாதங்களாக மீன்பிடித் தொழில் செய்துவந்தனர். இந்த மீனவர்களுக்கு, முதல் 3 மாதங்களுக்கு மட்டும் பாதி சம்பளம் வழங்கிய மும்மது சலா, பின் சம்பளம் எதுவும் வழங்காமல் வேலைவாங்கிவந்துள்ளார். 

தொடர்ந்து வேலை செய்துவந்த மீனரவர்கள்,  கடந்த ஜூன் 18-ம் தேதி, மீன்பிடி ஊதியத்தை வழங்குமாறு கேட்டதற்கு, முகம்மது சலா மீனவர்களின் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளைப் பறித்துக்கொண்டு வெளியே அனுப்பிவிட்டதாகவும், மீனவர்கள்  கையில் பணமின்றி, உண்ண உணவும், தங்க இடமும் இன்றி தவித்துவருகின்றனர் என அவர்களில் ஒருவரான  குமார் என்ற மீனவர் தெற்காசிய மீனவர் தோழமைக்கு தொலைபேசிமூலம் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்ததும், மீனவர்களின் உறவினர்கள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துாரியைச் சந்தித்து,  இரானில் உணவும், தங்க இடமும் இன்றி தவித்துவரும் மீனவர்களைப் பத்திரமாக மீட்டுத் தரக் கோரி மனு அளித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க