``100 ரூபாயில் அவர்களுக்கு கமிஷன் எவ்வளவு தெரியுமா?’’ - கொதிக்கும் கால்டாக்ஸி சங்கத்தினர் | Call Taxi association announces strike

வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (20/06/2018)

கடைசி தொடர்பு:20:15 (20/06/2018)

``100 ரூபாயில் அவர்களுக்கு கமிஷன் எவ்வளவு தெரியுமா?’’ - கொதிக்கும் கால்டாக்ஸி சங்கத்தினர்

சம்பளப் பிரச்னை தொடர்பாக மாதக் கணக்கில் போராடிவந்த நிலையில் ஓலா (OLA), உபேர் (UBER), ஃபாஸ்ட் டிராக் உள்ளிட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள், நாளை (21.6.2018) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுப்படப்போவதாக அறிவித்துள்ளன.

``100 ரூபாயில் அவர்களுக்கு கமிஷன் எவ்வளவு தெரியுமா?’’ - கொதிக்கும் கால்டாக்ஸி சங்கத்தினர்

பிரபல கால் டாக்ஸி நிறுவனங்களின் பணியாளர்கள், ஓட்டுநர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் தனியார் நிறுவனங்களும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களும் ரயில் மற்றும் விமானப் பயணிகளும் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கால் டாக்ஸி

சம்பளப் பிரச்னை தொடர்பாக மாதக் கணக்கில் போராடிவந்த நிலையில் ஓலா (OLA), உபேர் (UBER), ஃபாஸ்ட் டிராக் உள்ளிட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள், நாளை (21.6.2018) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. பிரபல கால் டாக்ஸி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் புதிய வாடிக்ககையாளர்களைக் கவர்வதற்காகவும் பல்வேறு உத்திகளைக் கையாளும் அதேவேளையில், அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநர்களை வஞ்சித்து வருகின்றன. தங்களுக்கு சம்பள உயர்வுக் கோரி, கால் டாக்ஸி டிரைவர்கள் மற்றும் சொந்தமாகக் கார் வைத்து குறிப்பிட்ட நிறுவனங்களுக்காக இயக்கும் உரிமையாளர்கள் பல மாதங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதால், சம்பள உயர்வு கோரி நாளை முதல் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

"முறையற்று செயல்படும் கால்டாக்ஸி நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும். ஆட்டோக்களைப் போன்று கால்டாக்ஸிகளுக்கும் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும். டீசல் விலைக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்த வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதுபற்றி 'உரிமைக்குரல்' ஓட்டுநர் சங்கப் பொருளாளர் சக்தியிடம் பேசியபோது, "கால் டாக்ஸி நிறுவனங்கள் ஆரம்பத்தில் எங்களின் கார்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும்போது கமிஷன் எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று சொல்லித்தான் சேர்த்துக்கொண்டனர். அதன் பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக கமிஷன் எடுத்து இப்போது
30 சதவிகிதம் வரை கமிஷன் எடுத்துக்கொள்கிறார்கள்.100 ரூபாயில் 30 ரூபாய் கமிஷன் எடுத்துக்கொண்டால். மீதமுள்ள 70 ரூபாயில் டீசல், மெயின்டனன்ஸ் போக 20 ரூபாய்தான் கிடைக்கிறது. மக்களிடம் கட்டணத்தை அதிகமாக வசூலித்தால் வாடிக்கையாளரை இழக்க நேரிடும் என்பதற்காக, டிரைவர்கள் மற்றும் கார் உரிமையாளர்களின் தலையில் கையை வைக்கிறார்கள். 

கால் டாக்ஸி

கால்டாக்ஸி நிறுவனங்கள் தங்களின் கமிஷனைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது ஆட்டோ கட்டணத் திருத்தம்போல எங்களுக்கும் கட்டணத் திருத்தத்தை அரசு கொண்டு வர வேண்டும். இதற்காக நாங்கள் வருடக்கணக்கில் போராடி வருகிறோம். கால் டாக்ஸி நிறுவனத்திடம் எங்கள் கோரிக்கையைச் சொன்னால் எங்களை மதிப்பதே கிடையாது. மீறி போராட்டம் செய்தால் மிரட்டுகிறார்கள். 2018 ஜனவரி மாதம் போராடியபோது, போக்குவரத்து இணை ஆணையர் எங்களைச் சந்தித்து, கூடிய விரைவில் கால்டாக்ஸி  டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு நல்லது செய்யப்படும் என்று கூறினார். ஆனால், இன்றுவரை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கால் டாக்ஸி நிறுவனங்கள் பெருகிவிட்டதால் எங்களால் தன்னிச்சையாகச் செயல்பட முடியவில்லை. அதனால்தான் எங்களின் உரிமைக்காக, சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஓலா தலைமை அலுவலகத்துக்கு முன்பு நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம். எங்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதை அறிவோம். ஆனாலும், எங்களுக்கும் குடும்பம் இருக்கிறதே. கால்டாக்ஸி நிறுவனங்கள் தங்களின் லாபத்துக்காக டிரைவர் மற்றும் டாக்ஸி உரிமையாளர்களின் ரத்தத்தை உறிஞ்சிவருகிறார்கள். இதற்கு ஒரு நல்ல முடிவு வரும் என்று நம்புகிறோம். எங்கள் போராட்டம் தொடரும்" என்றார்.

கால் டாக்ஸி டிரைவர்கள் மற்றும் கால் டாக்ஸி உரிமையாளர்களின் இந்தப் போராட்டம் பற்றி சென்னை ஓலா தலைமை அலுவலக அதிகாரியைத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொன்னோம்... "சார் இதுபற்றி வேறு ஒரு டிபார்ட்மென்டிலிருந்து உங்களுக்கு கால் செய்யச் சொல்கிறேன்" என்றார். ஆனால், அதன் பிறகு அந்த நிறுவனத்திடமிருந்து எந்தவொரு போன் காலும் நமக்கு வரவில்லை.
 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close