கைதி பாக்சர் முரளி கொடூரக்கொலை - புழல் சிறையில் நடந்த பயங்கரம்!

புழல் சிறையில் கைதி பாக்சர் முரளி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புழல் சிறையில் இருந்த வியாசர்பாடியைச் சேர்ந்த கைதி பாக்சர் முரளி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாக்சர் முரளி

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பாக்சர் முரளி. பல்வேறு கொலை, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகளில் இவரது பெயர் அடிபட்டது. எனவே சில மாதங்கள் முன்பாக குண்டர் சட்டத்தின்கீழ் பாக்சர் முரளியை போலீஸார் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், நேற்று சிறை கழிவறையில் வைத்து, பாக்சர் முரளியின் எதிர் கோஷ்டியை சேர்ந்த ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகளான சக சிறை கைதிகள், கார்த்தி, ரமேஷ், ஜோசப், பிரதீப் குமார், சரண்ராஜ் ஆகிய ஐந்து பேரும் முரளியை திடீரென சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் கழுத்து, பிறப்புறுப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வெட்டுப்பட்டுத் துடித்துள்ளார் முரளி. உடனடியாக சிறையிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு போலீஸார் முதலுதவி அளித்துள்ளனர். 

பிறகு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். சிறைக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை அனுமதித்தது எவ்வாறு, எதிர் கோஷ்டி எனத் தெரிந்தும் இருவரும் ஒரே இடத்தில் சேரவிட்டது எப்படி என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

6 கைதிகளுக்கு 1 போலீஸ்காரர் என்ற விகிதத்தில் சிறைக்குள் காவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டு, புழல் சிறையில் சுமார் 100 கைதிகளுக்கு 1 போலீஸ் பாதுகாப்புதான் அளிக்கக் கூடிய நிலையில் காவல்துறை பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதும் இதுபோன்ற கொலைகளுக்கு காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், புழல் சிறையில், பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளது. மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கின்றன எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!