எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தைப் பார்வையிட்ட மத்திய, மாநில அமைச்சர்கள்..! | Union Minister Pon.Radhakrishnan visits Thoppur which is selected for construct AIIMS

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (21/06/2018)

கடைசி தொடர்பு:04:00 (21/06/2018)

எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தைப் பார்வையிட்ட மத்திய, மாநில அமைச்சர்கள்..!

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதுரை தோப்பூரில் உள்ள நிலத்தை அம்மாவட்டஆட்சியர் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்திலுள்ள 5 இடங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. அதில், மத்திய அரசு மதுரையை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "மதுரையில் உள்ள தோப்பூரில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இங்கு, அதிநவீன வசதியுடன் 750 படுக்கை அறைகள் அமைக்கப்படும். மேலும், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்காக 100 இடங்கள் ஒதுக்கப்படும். மருத்துவமனை அமைத்திட மத்திய அரசுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும்'' என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூரில் உள்ள இடத்தினை மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் ஆகியோர் பார்வையிட்டனர்.  

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு சார்பில் 200 ஏக்கர் நிலம் கோரப்பட்டது. தற்போது 262.70 ஏக்கர் நிலம் தயார் நிலையில் உள்ளது. அரசாணை வெளியிடப்பட்டதும் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும். மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வழங்கப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மதுரை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் கூறினார். 

இதுகுறித்து தெரிவித்த இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'பழம் பெருமை வாய்ந்த தமிழின் தலைநகரம், அன்னை மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரை கடந்த 70 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு அறிவித்து மிகப் பெரிய கௌரவத்தை இந்த மூவேந்தர் மண்ணிற்கு வழங்கி இருக்கிறார். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய இருப்பது மாநில மற்றும் மத்திய அரசுகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நடைபெறும். அதில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை சம்மதிக்க வைத்து அழைத்து வருவோம். பிரதமர் மோடி வர வேண்டும். அன்றைய தினத்தை தென் மாவட்ட மக்கள் ஒவ்வொரும் தங்கள் வீடுகளில் அதனைத் திருவிழாவாக கொண்டாட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" என்றார். 

மேலும் ஆட்சியர் வீரராகவராவ்  தயாராக உள்ள 194 ஏக்கர் மற்றும் விரிவாக்கம் செய்வதற்கு வசதியாக கூடுதலாக இடம் என மொத்தம் 262 ஏக்கர் இடம் தயாராக இருப்பதாக வரை படத்தைக் காண்பித்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு விளக்கினார்.