வெளியிடப்பட்ட நேரம்: 04:40 (21/06/2018)

கடைசி தொடர்பு:10:24 (21/06/2018)

மழைநீர் தேங்கி நிற்கும் வழித்தடம்..! பொதுமக்கள் அவதி

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள எல்.ஐ.சி காலனியில் இருந்து சீனிவாசபுரம் செல்லும் வழியில் ரயில்வே பாலம் உள்ளது. இதில் தேங்கி நிற்கும் மழைநீரால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை பெய்த மழையினால் இங்கு தேங்கிய மழைநீர் நான்கு நாள்களாகியும் இன்றுவரை வடியவே இல்லை.

இந்த ரயில்வே பாலத்தின் கீழே உள்ள பாதை மிகவும் முதன்மையான வழித்தடம். சீனிவாசபுரம், ஆபிரகாம் பண்டிதர் நகரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், இந்தப் பாலத்தின் வழியாகதான் மருத்துவக்கல்லூரி, புதிய பேருந்து நிலையம், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளுக்குச் சென்று வருகிறார்கள்.

குறிப்பாக தினமும் ஏராளமான பள்ளி மாணவர்கள் இந்தப் பாதையின் வழியாகதான் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று வருகிறார்கள். இந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்ற இந்த வழித்தடம், ஒரு சிறு மழை பெய்தாலே தெப்பக்குளம் போல் மாறி இப்பகுதி மக்களை பெரும் சிரமத்துக்கு ஆளாக்கி வருகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி மக்கள், ’நீங்களே பாருங்க இந்த தண்ணீரீல எப்படி நாங்க போயிட்டு வர முடியும். இப்பவே இப்படினா, மழைகாலங்கள்ல எங்க நிலைமை ரொம்ப மோசம். குறிப்பா பெண்களும் மாணவர்களும் ரொம்பவே சிரமப்படுறாங்க. இந்த தண்ணீரில இறங்கி நடந்து போனால், டிரஸ் எல்லாம் நனைஞ்சிப் போயிடுது. ஒரு நாள் மழை பேஞ்சாலே பல நாள்களுக்கு இங்க குளம் மாதிரி தண்ணீர் தேங்கிடும். இந்தப் பகுதியில தெரு விளக்கு இல்லாததால இரவு நேரங்கள்ல இருட்டா இருக்கும். இதனால் இந்தப் பக்கம் புதுசா வரக்கூடிய வெளி நபர்கள் தண்ணீர்ல பள்ளத்துக்குள்ள கால் இடறி கீழே விழுந்துடுறாங்க.

நாங்களும் பல ஆண்டுகளாக அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட்டுக்கிட்டுதான் இருக்கோம். ஆனாலும் இதுக்கு ஒரு விடிவுகாலம் பொறக்காமலே இருக்கு. இதுல பல நாள்கள் தண்ணீர் நிக்கிறதுனால, ஏராளமான கொசுக்கள் பெருகி, டெங்கு பாதிக்கக்கூடிய ஆபத்துகளும் ஏற்படுது. ரயில்லே நிர்வாகமும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து இதுக்கு ஒரு தீர்வு காண வேண்டும். நீர் உறிஞ்சும் மோட்டார் அமைச்சு, தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் ரயில்வே பாலத்துக்கு கீழே தேங்கக்கூடிய தண்ணீரை சுத்தப்படுத்துறாங்க. அதுமாதிரி இங்கயும் மோட்டார் அமைச்சிக் கொடுத்தாங்கனா ரொம்பவே உதவியாக இருக்கும்' என்கிறார்கள்.