வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/06/2018)

கடைசி தொடர்பு:09:11 (21/06/2018)

அடக்குமுறை மூலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதை கைவிட வேண்டும்.! எஸ்.டி.பி.ஐ கண்டனம்

சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை சாலை திட்டமானது மக்களின் கருத்துக்களை கேட்டறியாமல் காவல்துறையின் அடக்குமுறை மூலம் தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது என்று எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் தெகலான்பாகவி கூறினார்.

சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழிச்சாலை திட்டமானது மக்களின் கருத்துகளை கேட்டறியாமல் காவல்துறையின் அடக்குமுறை மூலம் தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது என்று எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் தெகலான்பாகவி கூறினார்.  

அடக்குமுறை மூலம்  

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தெகலான்பாகவி, ``ஆயிரம் கிணறுகள், நூற்றுக்கணக்கான ஏரி, குளம், குட்டை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகளையும், வீடுகளையும், கோயில், வழிபாட்டுத்தலங்களையும், 2,000 ஏக்கர் விளை நிலங்களையும், 500 ஏக்கர் வனப்பகுதிகளையும் அழித்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால் 34 கி.மீ பயண தூரம் குறைவதைத் தவிர வேறு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கப்பெறும் என்பதுகூட திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசு இன்னும் தெரிவிக்கவில்லை.

மத்திய, மாநில அரசுகள் கொண்டுவரும் இத்திட்டத்துக்கு சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உட்பட 5 மாவட்ட விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சாலை அமைக்கத் தேவையான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளை மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் கூட நடத்தாமல், அடக்குமுறையை கையாண்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்திட்டத்துக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பதைக்கூட அரசு தடை விதித்து கையாண்டு வருகிறது. போராட்டம் நடத்தாமல் கருத்து தெரிவித்ததற்காக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், நடிகர் மன்சூர் அலிகான், மாணவி வளர்மதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள், பொதுமக்கள் அனைவரையும் சிறையிலடைத்து வருகின்றனர். இந்தச் சாலை திட்டத்தால் பாதிப்புகளைச் சந்திக்கவிருப்பவர்கள் சிறு, குறு விவசாயிகள்தான். இவர்களின் வாழ்வாதாரமே அந்த நிலம்தான். அவர்கள் எங்கே போவார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக வளர்ச்சிக்குத் திட்டங்கள் அவசியம்.

ஆனால், முதுகெலும்பான விவசாயத்தை அழித்துவிட்டு புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்நோக்கம் இருக்கிறது. மக்கள் கருத்தை அறியாமல் அடக்குமுறை மூலம் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஜனநாயக வழியில் போராடுபவர்களையும், குரல் கொடுப்பவர்களையும் நசுக்கும் அராஜக போக்கு நிறுத்தப்படவேண்டும். இது தொடர்ந்தால எஸ்.டி.பி.ஐ கட்சி மிகப்பெரும் அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும்'' என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க