வெளியிடப்பட்ட நேரம்: 06:15 (21/06/2018)

கடைசி தொடர்பு:08:56 (21/06/2018)

திருச்செந்தூர் கோயிலில் மரம் முறிந்து விழுந்ததில் 4 பெண்கள் படுகாயம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்னதானக் கூடத்துக்கு எதிர்ப்பகுதியில் பழைமையான வேப்ப மரத்தின் கிளை முறிந்து கீழே விழுந்ததில் 4 பெண்கள் காயம் அடைந்தனர். 

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடும், கடற்கரை ஓரத் தலமுமானது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயிலில், கடந்த டிசம்பர் 14-ம் தேதி, வள்ளிக் குகைக்கு எதிர்ப்பகுதியில் உள்ள கிரிவலப் பிராகாரத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதில் மோர் விற்றுக்கொண்டிந்த பேச்சியம்மாள் என்ற ஒரு பெண் பலியானார். பிராகாரத்தில் நடந்துசென்ற இரண்டு பக்தர்கள் காயமடைந்தனர். இதனால், கிரிப் பிராகாரத்தில் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. கிரிப் பிராகார மண்டபமும் முழுமையாக அகற்றப்பட்டது. 

பக்தர்களின் நிழலுக்காக சிவன்கோயில் முகப்பில் இருந்து தூண்டுகை விநாயகர் கோயில் வரையில், இருபுறமும் 20 அடி உயரமுள்ள 170 தூண்களுடன்  1/2 கீ.மீ தூரம் வரையில் அமைக்கப்பட்டுள்ள ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை மண்டபத்தில், லாரி மோதியதில் இரண்டு தூண்கள் இடிந்து விழுந்தன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் கோவிந்தசாமி கலையரங்கம் அருகில் உள்ள சுமார் 60 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேப்பமரம் சரிந்து விழுந்தது. அதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த 17-ம் தேதி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் வெளியேறும் பகுதியில் உள்ள பொது தரிசன வரிசையில் பக்தர்கள் செல்லும் மரப் பாலத்தின் பக்கவாட்டு இரும்புக் கைப்பிடி உடைந்ததில், 5 பக்தர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  உடனடியாக அந்த இடத்தில் கம்புகள் கட்டப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக பக்தர்கள் கிரிப் பிராகாரப் பகுதியில் அமர்ந்து உணவு அருந்துவது, இளைப்பாருவது வழக்கம். கிரிப் பிரகாரம் முழுமையாக இடிக்கப்பட்டுவிட்டதால் கோயில் வளாகத்தில் உள்ள மர நிழலில் அமர்ந்து இளைப்பாறி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று (20.06.18) மதியம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள அன்னதானக் கூடத்துக்கு எதிர்ப் பகுதியில் உள்ள பழைமையான வேப்ப மரத்தின் உச்சிப்பகுதிக் கிளை காற்றில் திடீரென முறிந்து கீழே விழுந்தது. அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த தெய்வச்செயல்புரம் பகுதியைச் சேர்ந்த சிவசுந்தரி, சிவகாமி மற்றும் குறி சொல்லும் சரஸ்வதி, பாடத்தி ஆகிய 4 பெண்கள் காயம் அடைந்தனர்.

உடனடியாக, காயமடைந்த பெண்களை திருக்கோயில் இணை ஆணையர் பாரதி தனது காரில் ஏற்றி, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். இதில், சரஸ்வதி என்பர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வேப்பமரக் கிளை முறிந்து விழுந்து 4 பெண்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க