வெளியிடப்பட்ட நேரம்: 06:37 (21/06/2018)

கடைசி தொடர்பு:08:24 (21/06/2018)

காகித ஆலையில் அமைச்சர் ஆய்வு; செய்தியாளர்கள் தர்ணா

 

கரூரில் அமைந்துள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான காகித ஆலையில் ஆய்வு செய்ய வந்த தொழில்துறை அமைச்சரோடு செய்தியாளர்களையும் உள்ளே அனுமதிக்காமல் ஆலை நிர்வாகம் மல்லுக்கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால்,செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு பொதுத்துறை நிறுவனமும், அதிக லாபம் ஈட்டும் நிறுவனமுமான தமிழ்நாடு செய்திதாள் நிறுவனத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு மேற்கொள்வதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதன் அடிப்படையில் செய்தியாளர்களை கரூரில் இருந்து ஆலை செயல்படும் புகளூர் வரை வேனில் அழைத்துச் சென்றனர். ஆனால், ஆய்வுக்குச் செய்தியாளர்களை அழைத்துவிட்டு செய்தியாளர்கள் இல்லாமலே அமைச்சர் ஆலையில் ஆய்வை முடித்துவிட்டார்.

மேலும், அமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்கவும் மறுத்துவிட்டதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்ததால், ஆலையில் நடக்கும் முறைகேடுகள், தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்த தகவல்களையோ அல்லது செய்திகளையோ அறிய முடியாத நிலை ஏற்பட்டதால் செய்தியாளர்கள் அனைவரும் அமைச்சரின் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு வெளியேறினர்.

வெளியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்திய அமைச்சர் தரப்பினர், ஆய்வை முடித்துக் கொண்டு வெளியில் வந்ததும் பேட்டியளித்தார். இதுபற்றி, நம்மிடம் பேசிய செய்தியாளர்கள், 'இந்தக் காகித ஆலையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன. அதோடு, விதிமுறைகளை மீறி ஆலைக்குள் பல ராட்சத போர்வெல்களைப் போட்டு, நிலத்தடி நீரை உறிஞ்சி வருகிறார்கள். இதற்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்த்து வருகின்றனர். இதனால், ஆலைக்குள் வெளி ஆட்கள் யாரையும் அனுமதிக்காமல் ஆலை நிர்வாகம் தடுத்து வருகிறது. இப்போது அமைச்சர் ஆய்வின்போது செய்தியாளர்களும் உள்ளே போக நேர்ந்தால், உள்ளே நடக்கும் தவறுகளைச் செய்தியாளர்கள் போகஸ் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில்தான் கடைசி நேரத்தில் அமைச்சரிடம் அனுமதி வாங்கி, ஆலைக்குள் செய்தியாளர்களை அனுமதிக்காமல் ஆலை நிர்வாகம் தடுத்துவிட்டனர். ஆனால், இப்படி தடுத்ததன் மூலம் ஆலைக்குள் முறைகேடு நடைபெறுகிறது என்று ஆலை நிர்வாகம் மறைமுகமாக ஒத்துக்கொண்டுள்ளது. இந்த ஆலையில் நடக்கும் தவறுகளை, பிரச்னைகளை விரைவில் தமிழக மக்களுக்கு அம்பலப்படுத்துவோம்" என்றார்கள்.