வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (21/06/2018)

கடைசி தொடர்பு:07:15 (21/06/2018)

‘கருணாநிதிபோல் மிமிக்ரி!’ - அசத்திய அமைச்சர் செங்கோட்டையன்!

செங்கோட்டையன்

அ.தி.மு.க சார்பில், மாவட்டம்தோறும் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பில் நேற்று ஈரோடு காலிங்கராயன் பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டனர். 

பொதுக்கூட்டத்தின்போது செங்கோட்டையன் பேசுகையில், ``இன்னும் ஒரு வருடத்தில் கடன் சுமையே இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்கவும், ப்ளஸ் டூ முடித்த உடனேயே அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கின்ற வகையிலும் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்றைக்கு நம்முடைய குழந்தைகள், கான்வென்ட் குழந்தைகளைப் போல 4 வண்ணச் சீருடைகளை அணிந்து பள்ளிக்குச் செல்கின்ற காட்சி இந்த அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் புத்தகங்களை எடுத்துச்செல்லாமல் ‘டேப்’ எனப்படும் கருவி மூலம் பாடங்களை டவுன்லோடு செய்து படிக்க, 50 லட்சம் மாணவர்களுக்கு ‘டேப்லெட்’ கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், க்யூஆர் கோடு என இந்திய வரலாற்றிலே இனி எந்த மாநிலத்திலும் செய்ய முடியாத மாற்றத்தை தமிழக அரசு செய்திருக்கிறது. இது உங்கள் அரசு. உங்களால் உருவாக்கப்பட்ட அரசு. உங்களுக்காகவே உயிர்த் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்” என அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு உருக்கமாகப் பேசினார்.

செங்கோட்டையன்

தொடர்ந்து பேசியவர், ``நம்முடைய மாநிலத்தில் ஓடும் நதிகள் கர்நாடக மாநிலம், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உருவாகின்றன. எனவே, நமக்கு வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்குப் பல தடைகள் இருக்கிறது. தண்ணீர் கேட்டு வேண்டுகோள் வைத்தாலும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது. பேச்சுவார்த்தையின் மூலமாகவும் முடிவுகள் எட்டப்பட முடியவில்லை.

அன்றைக்கு சட்டசபையிலே ஜெயலலிதா ‘சட்டப் போராட்டத்தை நடத்தி இந்த தமிழ்நாட்டு மண்ணிலே வாழ்கின்ற மக்களுக்கு தண்ணீரைப் பெற்றுத் தருவதுதான் என்னுடைய லட்சியம் என்று குறிப்பிட்டார். அதைக்கூட தி.மு.க தலைவர் கருணாநிதி, ‘என்னது சட்டப் போராட்டமா! நடத்தி ஜெயித்துவிடுவீர்களா’ என நக்கலாக பேசிக்கொண்டிருந்தார்” என கலைஞர் பேசியதை அவரது குரலிலேயே மிமிக்ரி செய்து செங்கோட்டையன் சுட்டிக்காட்ட கூட்டம் ஆர்ப்பரித்தது.

காவிரி

தொடர்ந்தவர், ``இன்றைக்கு நாம் காவிரி உரிமையைப் பெற்றதற்கு அன்றைக்கு அம்மா நடத்திய சட்டப் போராட்டம்தான் காரணம். நாம் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் அரசாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். சாவை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்” என்றும் சட்டசபையில் தி.மு.க செயல்படும் விதம் குறித்தும் கடுமையாகச் சாடினார்.