வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (21/06/2018)

கடைசி தொடர்பு:10:00 (21/06/2018)

சூறைக்காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை சேதம்: உடனடியான நிவாரணம் வழங்க கோரிக்கை!

வாழை மரம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த சிலதினங்களாக வீசும் சூறைக் காற்றுக்கு குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு
இராமாபுரம், மேற்கு இராமாபுரம், வெள்ளக்கரை, அன்னவல்லி, வழிசோதனைபாளையம், கொடுக்கன்பாளையம், சாத்தான்குப்பம், 
வி.காட்டுபாளையம், எஸ்.புதூர், எல்லப்பன்பேட்டை, மீனாச்சிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பல 
ஆயிரம் வாழை மரங்கள் சேதம் அடைந்தன. வாழைக் குலை தள்ளி அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், திடீரென வீசிய 
சூறைக் காற்றுக்கு வாழை மரங்கள் குலையுடன் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

     கடலூர்

இதனால் இந்தப் பகுதி விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று விவசாயிகளுடன் கடலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தார். கடலூர் முகமை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தண்டபானியை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவையும் அளித்தார். ஒரு வருடம் உழைத்து அதன் பலனை அறுவடை செய்யும் சமயத்தில் வாழை மரங்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், அரசு உடனடியாக  கணக்கெடுக்கும் பணியைத் துவங்கி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.