வெளியிடப்பட்ட நேரம்: 08:43 (21/06/2018)

கடைசி தொடர்பு:08:45 (21/06/2018)

``அவசரமாக பணிக்குச் செல்ல வேண்டியிருந்தாலும் யோகா பயிற்சி செய்ய வேண்டும்” மோடி அட்வைஸ்!

சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

மோடி யோகா

இன்று 4-வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது . இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் யோகா பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. கப்பல்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் யோகா தினத்தையொட்டி யோகா செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மோடி யோகா

பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் டெராடூனில் உள்ள வன ஆராய்ச்சி மையத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். ஆராய்ச்சி மையத்தின் மைதானத்தில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 50,000 பேர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘இன்றைய வேகமான உலகத்தில், யோகா உடலையும், மூளையையும், ஆன்மாவையும் கட்டுப்படுத்தும். அதன் மூலம் அமைதி நிலவும். யோகா உலகின் ஒருங்கிணைந்த சக்திகளில் ஒன்றாகும். இந்த உலகம் யோகாவை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடி வருகிறது. நல்ல ஆரோக்கியத்துக்கு யோகா தேவையானதாக மக்கள் உணர்ந்துள்ளார்கள். அவசரமாக வேலைக்குச் செல்ல வேண்டி இருந்தாலும் யோகா பயிற்சி செய்ய வேண்டும்’ என்றார். பின்னர் மோடி, பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார். 

யோகா

நாடு முழுவதும் சுமார் 5,000-க்கும் அதிகமான யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ராஜஸ்தானில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ், அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சுமார் 2 லட்சம் பேர் கலந்துகொண்டனர். இது கின்னஸ் சாதனையாகும். விசாகப்பட்டினத்தில் கப்பல் தளத்தில் கப்பல் துறையில் பணிசெய்வோர் யோகாவில் ஈடுபட்டனர். கொச்சியில் ஐ.என்.எஸ் ஜமுனா கப்பலில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். 

யோகா


இந்திய - திபத்திய எல்லையில் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் சுமார் 18,000 அடி உயரத்தில் பனியில் யோகா பயிற்சி மேற்கொண்டனர். மேலும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி யோகா பயிற்சி மேற்கொண்டனர்.