தூத்துக்குடி: பேருந்துக்கு தீ வைத்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு கருங்குளத்தில் அரசுப் பேருந்து மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு கருங்குளத்தில் அரசுப் பேருந்து மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பேருந்து தீ வைப்பு

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் பேரணியாகச் சென்றபோது, ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்குப் பிறகு மாவட்டத்தில் 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அடுத்தடுத்த நாள்களில் மாவட்டத்தில் சில பகுதிகளில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, பேருந்து கண்ணாடி உடைப்பு, பேருந்து எரிப்பு மற்றும் கல் வீச்சு ஆகிய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.

இந்நிலையில், கடந்த மே 25-ம் தேதி ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கருங்குளத்தில் உடன்குடியில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மர்ம நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இப் பேருந்தில் பயணம் செய்த 52 பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். இதில் காயம்பட்ட சுடலை, சுடலையின் மனைவி வள்ளியம்மாள் மற்றும் ஜெபக்குமார் ஆகிய 3 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த மே 31-ம் தேதி வள்ளியம்மாள் உயிரிழந்தார். பேருந்து தீ வைப்புச் சம்பவம் தொடர்பாக மணக்கரையைச் சேர்ந்த கள்ளவாண்டன், சிவராமன், பேச்சிமுத்து ஆகிய மூன்று பேரை செய்துங்கநல்லூர் போலீஸார் கைது செய்தனர். இவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பாவின் பரிந்துரைப்படி ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் உத்தரவின் படி 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளைங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

முற்றுகைப் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக, கடந்த ஜூன் 11-ம் தேதி, நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த சுனில் ரகுமான், முகமது இஸ்மாயில், முகமது யூனுப், தேனியைச் சேர்ந்த சோட்டையன், கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன், வேல்முருகன் ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிசிடிவி, வீடியோ பதிவு மற்றும் விசாரணையின் அடிப்படையில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து வருகின்றனர் காவல்துறையினர்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!