வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (21/06/2018)

கடைசி தொடர்பு:11:15 (21/06/2018)

`அன்று தண்ணீருக்கு அலைந்தோம்; இன்று மகிழ்கிறோம்'- குஷியில் விவசாயிகள்

தேங்கி கிடக்கும் மழை நீர்

கடந்த பத்து நாள்களாக எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் கரூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்ய குடிநீர், கால்நடைகளுக்கு குடிநீர் என்று அல்லாடி வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

கரூர் மிகவும் வறட்சியான மாவட்டம். கரூர் மாவட்டத்தில் காவிரி ஓடினாலும், 70 சதவிகிதம் இருப்பவை மானாவாரி நிலங்கள்தான். `மழை பெய்தாதான் வெள்ளாமை' என்று வருணபகவானை எதிர்பார்த்து வானத்தைப் பார்ப்பதுதான் கரூர் விவசாயிகளின் வழக்கமாக இருக்கும். அதுவும், கடந்த சில வருடங்களாக கரூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாமல் போக, எங்கும் வறட்சி, எதிலும் வறட்சி என்ற நிலை ஏற்பட்டது. வெள்ளாமை பண்ண தண்ணீர் இல்லை என்பதுபோய் குடிக்கவே தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அல்லல்பட்டனர். நாடுகளைத் தேடி போன கொலம்பஸ் போல், 'எங்கே தண்ணீர் கிடைக்கும்?' என்று காலிக் குடங்களோடு மக்கள் அலையும் நிலை ஏற்பட்டது. அதோடு, கால்நடைகளுக்கும் ஏரி, குளங்கள், கண்மாய்களில் தண்ணீர் இன்றி வறண்டு போக, நிலைமை கையை மீறிப் போனது. இந்நிலையில்தான், கடந்த பத்து நாள்களாக கரூர் மாவட்டத்தில் வானம் அடிக்கடி பொத்துக்கொண்டு, மழை பெய்யோ பெய்யென பெய்தது, விவசாயிகள் மகிழ்ந்தனர்.

குட்டையில் தேங்கி இருக்கும் மழை நீர்

இதுபற்றி, பேசிய கடவூர் ஒன்றியத்தில் உள்ள தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள், ``கரூர் மாவட்டத்திலேயே அதிகம் வறண்ட பகுதியாக எங்க பகுதிதான் இருந்துச்சு. ஊரே பாலைவனமாகி மக்களுக்கும் மட்டுமல்ல, நாங்கள் வளர்க்கும் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தோம். இந்நிலையில்தான், கடந்த பத்து நாள்களாக நல்ல மழை பெய்து, எங்களை மகிழ்விச்சுருக்கு. தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த குளம், குட்டை, ஏரி, கண்மாய் எல்லாம் மழை தண்ணீர் தேங்கி இருக்கு. எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிச்சு, பொது பைப்புகள்ல பல மாதங்களுக்குப் பிறகு குடிக்க தண்ணீர் வருது. வராது வந்த மாமணியான வருணபகவானுக்கு நன்றி" என்று நெக்குருகிச் சொன்னார்கள்.