தேசிய நெடுஞ்சாலையாக மாறுகிறது கிழக்கு கடற்கரை சாலை... மத்திய அரசின் அடுத்த அதிரடி!

கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மத்திய அரசு அறிவிக்கவுள்ளது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலையாக மாறுகிறது கிழக்கு கடற்கரை சாலை... மத்திய அரசின் அடுத்த அதிரடி!

`ECR’ (East Coast Road) என்று நாம் செல்லமாக அழைக்கும் கிழக்கு கடற்கரை சாலையை இனி அப்படி அழைக்க முடியாது. சென்னையின் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்தச் சாலை, விரைவில் தேசிய நெடுஞ்சாலையாக மாறப் போகிறது.

சென்னைவாசிகள் தினமும் சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமானது போக்குவரத்து நெரிசல். லட்சங்களையும், கோடிகளையும் கொடுத்து வாங்கிய வாகனங்கள் என்றாலும் சென்னைச் சாலைகளின் நெரிசலில் சிக்கி நத்தை போல் ஊர்ந்துதான் செல்ல வேண்டும். இதனாலேயே சென்னைவாசிகள் வாரத்தில் ஒருநாளாவது கிழக்கு கடற்கரை சாலையில் `ஹாயாக' ஒரு பயணத்தை மேற்கொள்வார்கள். கிழக்கு கடற்கரை சாலை பயணத்தை அழகூட்டும் விதமாக மாயாஜால் சினிமாஸ், வி.ஜி.பி, எம்.ஜி.எம் தீம் பார்க்குகள், முட்டுக்காடு படகுக்குழாம், கோவளம் கடற்கரை, திருவிடந்தை நித்திய பெருமாள் கோயில், முதலைப்பண்ணை, புலிக்குகை, மாமல்லபுரம் என ஏராளமான பொழுதுபோக்கு சுற்றுலாத் தலங்கள் நிறைந்துள்ளன. சென்னையிலிருந்து புதுச்சேரி வரை மாநில நெடுஞ்சாலையாகவும், அங்கிருந்து நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலையாகவும், நாகப்பட்டினத்திலிருந்து கன்னியாகுமரி வரை மீண்டும் மாநில நெடுஞ்சாலையாகவும் இருந்து வருகிறது. இப்போது சென்னையிலிருந்து - கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை - தேசிய நெடுஞ்சாலை

1998ம் ஆண்டிற்கு முன்புவரை சென்னை, அக்கரை பகுதியிலிருந்து மரக்காணம் அடுத்த கூனிமேடு வரை ஒருவழித்தடமாக இருந்தது கிழக்கு கடற்கரை சாலை. அப்போது புதுச்சேரியிலிருந்து இரண்டு பேருந்துகளும், கடலூரிலிருந்து இரண்டு பேருந்துகளும் மட்டுமே சென்னைக்கு இயக்கப்பட்டன. 1998ல் இருவழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 2002ம் ஆண்டு முதல் கிழக்கு கடற்கரை சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் (TNRDC) வசம் வந்தது. பின்பு சர்வதேச தரத்துக்கு இணையாகச் சாலையின் தரம் உயர்த்தப்பட்டு கட்டண சாலையாக மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பயணப் போக்குவரத்து அதிகம் இருந்ததால் சென்னையிலிருந்து மாமல்லபுரம் பூஞ்சேரி வரையிலும் நான்கு வழிச்சாலையாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மாற்றியது.

துறைமுகம் மற்றும் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசு பல ஆண்டுகளாக முயன்று வந்தது. சுங்கவரி வசூல் செய்வது மத்திய அரசின் வசம் போய்விடும் என்பதால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்காமலேயே இருந்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும், ஜெயலலிதா முட்டுக்கட்டை போட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்தார். அதில் கிழக்கு கடற்கரை சாலையை மத்திய அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த திட்டமும் அடங்கும்.

மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை தற்போதுவரை இருவழிச்சாலையாக இருந்து வருகிறது. அதை 64 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. கிழக்கு கடற்கரை சாலை மாநில நெடுஞ்சாலை எண் 49 என இதுவரை அழைக்கப்பட்டு வந்தது. தற்போது, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டபின் மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி வரை உள்ள சாலை 332A என மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நடுவில் 4 மீட்டர் அகலம் கொண்ட இடைவெளியில், இரண்டு பக்கங்களிலும் 30 மீட்டர் அகலத்தில் சாலைகள் அமையஉள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் அந்தச் சாலை ஆய்வு செய்யப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை வசம் உள்ள நிலம் என்பதை குறிக்கும் வகையில் மஞ்சள் நிற கற்கள் நடப்பட்டு வந்தன. அதிக வளைவுகள் மற்றும் கல்பாக்கம் அணுஉலை காரணமாக புதுப்பட்டினம் பகுதியில் புறவழிச்சாலை அமைகிறது. இதனால் புதுப்பட்டினத்துக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் தொடர்பு இருக்காது. 

கிழக்கு கடற்கரை சாலை

இது குறித்து சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பேசினோம். ``திட்ட இயக்குநரிடம்தான் நீங்கள் முழுமையான தகவல்களை பெறமுடியும். தற்போது, நிலத்தைக் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளவிருக்கிறோம். அதன் பிறகு இது தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவோம்.” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார். ஏற்கெனவே, சென்னை - சேலம் 6 வழிச்சாலை சமூக ஆர்வலர்களையும், விவசாயிகளையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அடுத்த அறிவிப்பு தமிழகத்தில் எந்தமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது போகப்போகத்தான் தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!