டி20 போட்டியில் 250 ரன்கள் குவித்து சாதித்த இங்கிலாந்து மகளிர் அணி! | England Women Score 250 in T20I

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (21/06/2018)

கடைசி தொடர்பு:12:17 (21/06/2018)

டி20 போட்டியில் 250 ரன்கள் குவித்து சாதித்த இங்கிலாந்து மகளிர் அணி!

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 250 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. 

இங்கிலாந்து

Photo Credit: Twitter/@englandcricket

இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இங்கிலாந்தின் டாண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி கேப்டன் சூஸி பேட்ஸின் அதிரடி சதத்தின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. சூஸி 124 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம் சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை நியூசிலாந்து படைத்தது. இதையடுத்து பேட் செய்த தென்னாப்பிரிக்க மகளிர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இதையடுத்து முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டி இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இங்கிலாந்தின் டேனியல் வையாட், பேமவுன்ட் இணை முதல் விக்கெட்டுக்கு 13.1 ஓவர்களில் 147 ரன்கள் குவித்தது. வையாட் 36 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 47 பந்துகளில் சதமடித்து அசத்திய பேமவுன்ட், 52 பந்துகளில் 116 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய ஸ்கீவர் 15 பந்துகளில் 33 ரன்களும், பிரன்ட் 16 பந்துகளில் 42 ரன்களும் எடுக்கவே இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. நியூசிலாந்து மகளிர் அணி படைத்த சாதனை சில மணி நேரங்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. உலகச் சாதனை இலக்கை நோக்கிக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

சர்வதேச கிரிக்கெட்டில் இந்த வாரம் முக்கியமானதாக மாறிப்போனது. மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 490 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணி கெத்துக் காட்டியது. அடுத்ததாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஆண்கள் அணி 481 ரன்கள் குவித்து, உலகச் சாதனை படைத்தது. இந்தநிலையில், தற்போது மகளிர் டி20 போட்டிகளில் அடுத்தடுத்து 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டிருக்கிறது.