டிரான்ஸ்ஃபரான ஆசிரியர்கள்... கதறி அழுத மாணவர்கள்... நிஜமான `சாட்டை' படத்தின் கதை

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் பகவானைக் கட்டிப்பிடித்து மாணவ, மாணவிகள் கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு, வெளியகரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 19 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த கல்வி ஆண்டில் 281 மாணவர்கள், மாணவிகள் படிக்கின்றனர். இந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது 264 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பள்ளியிலிருந்து பகவான், சுகுணா என்ற இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள் (ஆங்கிலம்) இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் திருத்தணியிலிருந்து 30 முதல் 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்களின் இடமாற்றத்தைக் கண்டித்துப் பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்குப் பூட்டு போட்டதுடன், பள்ளிக்குக் குழந்தைகளை இனி அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் ஆவேசமாகக் கூறினர். மேலும், இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர் பகவானைச் சூழ்ந்து கொண்ட மாணவ, மாணவிகள் அவரைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுதனர். அதைப்பார்த்த சக ஆசிரியர்களின் கண்களும் குளமாகின. ஒருகட்டத்தில் வகுப்பறைக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களுடன் நீண்ட நேரம் ஆசிரியர்கள் பேசி சமரசப்படுத்தினர். அப்போது ஆசிரியர்கள் பகவானும் சுகுணாவும் கண்கலங்கினர். 

இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தினர். போராட்டம் குறித்து விளக்கம் கேட்டனர். உடனடியாகப் பள்ளி நிர்வாகம் தரப்பில் முழு ரிப்போர்ட் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இடமாற்றத்தால் இரண்டு நாள், பள்ளியில் வகுப்புகள் சரிவர நடைபெறவில்லை. இதனால், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடனும் பள்ளி நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

போராட்டத்தைத் தொடர்ந்து சுகுணா என்ற ஆசிரியை மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பகவானின் இடமாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். இதனால், இன்று முதல் பள்ளி வழக்கம்போல செயல்படத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் பள்ளியில் நடந்த போராட்டம் குறித்து உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதில் பள்ளியில் உள்ள சிலரது தூண்டுதலின்பேரில் மாணவர்களும் பெற்றோர்களும் போராடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாம். இதனால், சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சிக்கல் ஏற்படக் கூடாது என்று கருதி போராட்டத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் கைவிட்டுள்ளனர். 

மாணவர்கள்

இதுகுறித்து பள்ளி தரப்பில் பேசியவர்கள், `` பட்டதாரி ஆசிரியர் பகவான், கடந்த 2014ம் ஆண்டு இந்தப் பள்ளிக்கு வந்தார். மாணவ, மாணவிகளுடன் ப்ரெண்ட்ஸ் போல பழகுவார். அவரின் கற்பிக்கும் திறன், அனைவருக்கும் பிடிக்கும். இதனால்தான் அவரை இடமாற்றம் செய்ததற்கு மாணவ, மாணவிகள் கண்கலங்குகின்றனர். அதுபோல ஆசிரியை சுகுணாவும் மாணவ, மாணவிகளிடம் அன்பாகப் பழகக்கூடியவர். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி ஒரே நேரத்தில் இரண்டு ஆங்கில ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். இதனால், ஆங்கிலப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்ற ஆதங்கத்தில் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பள்ளியில் இன்னும் ஓர் ஆங்கில ஆசிரியர் இருக்கிறார். தேவைப்பட்டால், மாவட்ட கல்வித்துறையிடம் பேசி, கூடுதலாக ஆங்கில ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் போராட்டத்தால் ஆசிரியர் பகவானின் இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

பெற்றோர்கள் தரப்பில் பேசியவர்கள், ``எங்களுடைய குழந்தைகளும் ஆங்கிலத்தில் தற்போதுதான் சரளமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். ஆங்கிலத்தை வேண்டா, வெறுப்பாகப் படித்த எங்கள் குழந்தைகள் பகவான், சுகுணா ஆகியோர் வந்த பிறகு விரும்பிக் கற்கத் தொடங்கியுள்ளனர். அதற்கு அவர்களின் அர்ப்பணிப்பே காரணம். இந்தச் சூழ்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு ஆங்கில ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆங்கிலப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்படும். மேலும், பகவான், சுகுணா என்ற இரண்டு ஆசிரியர்கள்மீது எங்கள் குழந்தைகளுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. இதனால்தான் அவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் தவிக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் அவர்கள், வீடுகளிலும் இரண்டு பேர் குறித்துதான் பேசுகின்றனர். இதற்காகத்தான் நாங்கள் போராடினோம். இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை" என்றனர்.

திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகையில், ``ஆசிரியர் பகவான், திருத்தணி பம்மராஜபேட்டையில் தங்கியுள்ளார். ஆசிரியை சுகுணா, பொதட்டூர்பேட்டையில் குடியிருக்கிறார். இவர்கள் இருவர்தான் பள்ளியில் ஜூனியர்கள். இதனால்தான் இவர்கள் இருவரும் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, சுகுணாவை வேலஞ்சேரி என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு இடமாற்றியுள்ளனர். அவர், அங்கு பணியில் சேர்ந்துவிட்டார். பகவான், அருங்குளம் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில்தான் பணி நிரவல் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்காக மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டம் நடத்தியதால் பிரச்னை பெரிதாகிவிட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்கள் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.  

ஆசிரியர்களின் இடமாற்றத்தைக் கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய சம்பவத்தைப் பார்க்கும்போது சமுத்திரகனி நடித்த 'சாட்டை' படத்தின் காட்சிகள் நிஜமாகியிருக்கின்றன. அந்தப்படத்தில் மாணவ, மாணவிகளின் மனதில் ஹீரோவாக வலம் வரும் சமுத்திரக்கனி போலத்தான் நிஜத்தில் ஆசிரியர்கள் பகவானும், சுகுணாவும் திருவள்ளூர் மாவட்ட மாணவ, மாணவிகளின் மனதில் இடம்பிடித்துள்ளனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!