தீபாவளிச் சீட்டு மோசடி... மக்களை எச்சரிக்கும் திருச்சி போலீஸ்! | Trichy police alert people on Diwali chit funds

வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (21/06/2018)

கடைசி தொடர்பு:13:23 (21/06/2018)

தீபாவளிச் சீட்டு மோசடி... மக்களை எச்சரிக்கும் திருச்சி போலீஸ்!

தீபாவளிச் சீட்டு மோசடி... மக்களை எச்சரிக்கும் திருச்சி போலீஸ்!

சமீபகாலமாக ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் குறிவைத்து நடக்கும் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அந்தவகையில், திருச்சியில் தீபாவளிச் சீட்டு என்கிற பெயரில் அடிக்கடி நடத்தப்படும் மோசடிகளால் மக்கள் ஏமாறுவது தொடர்கதையாகிறது.

தீபாவளிச் சீட்டு மோசடி

திருச்சி மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை தீபாவளிச் சீட்டு நடத்தி மோசடி செய்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. திருச்சி வரகனேரி கல்பாளையத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவர், காந்தி மார்க்கெட் பகுதியில் மிட்டாய்க் கடை வைத்திருந்தார். இவரது மனைவி ரஸிதா பானு. இவர்கள் இருவரும் காந்தி மார்க்கெட், பாலக்கரை, ஜெயில்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தினமும் 10 ரூபாய் என தீபாவளி சீட்டுக்காக வசூல் செய்துள்ளனர். தங்களிடம் சீட்டுப் போடுபவர்களுக்குத் தீபாவளிப் பண்டிகையின்போது 3,600 ரூபாய் பணத்துடன், பாத்திரம் மற்றும் பட்டாசுகளைக் கொடுப்பது வழக்கம்.

 தங்கம்இந்தத் தம்பதியிடம் சுமைதூக்கும் கூலித்தொழிலாளிகள், வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர், தீபாவளிச் சீட்டு போட்டிருந்தனர். ஆனால், பலருக்கும் தீபாவளிச் சீட்டு முடிவடைந்த நிலையில், அப்துல்காதர் தன் மனைவியுடன் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது. அதோடு சரி.

இதேபோல் திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த குமாரின் மனைவி கலைச்செல்வி தீபாவளிச் சீட்டு நடத்தி, ஐந்து லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டதாக திருச்சி புத்தூர் வி.என்.பி., தெருவைச் சேர்ந்த முருகேசன் மனைவி கல்யாணி கொடுத்த புகாரின் பேரில், உறையூர் போலீஸார் கலைச்செல்வி, அவருடைய கணவர் குமார், உறவினர் மோகன் ஆகியோரைக் கைதுசெய்தனர். மேலும், திருச்சி மார்சிங்பேட்டை பகுதியில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த, ராமலிங்க நகரைச் சேர்ந்த கில்பர்ட் என்பவர், தீபாவளிப் பண்டிகைக்கு இனிப்பு, பட்டாசு வழங்குவதாகக் கூறி, மாதந்தோறும் 400 ரூபாய் சீட்டுப் பிடித்தாகவும், இவரிடம் 180 பேர் சுமார் 6 லட்சம் ரூபாய்வரை பணம் கட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கில்பர்ட் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார். அந்த வரிசையில் தற்போது தீபாவளிச் சீட்டு மூலம் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் ஸ்வாகா செய்துவிட்டுத் தலைமறைவான செல்வம் என்பவர் போலீஸில் சிக்கியுள்ளார்.

உறையூர் எழில்நகர் கீழகல்நாயக்கன் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் தங்கம். இவர், கடந்த 1999-ம் வருடம் முதல் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் ஏலச்சீட்டு, தீபாவளி பண்டுச் சீட்டு, மாதாந்திரத் தங்க நகை சிறுசேமிப்புத் திட்டம் எனப் பல சீட்டுகளை நடத்திவந்தார். நீண்ட வருடமாக நடக்கும் கம்பெனி என்பதால் பொதுமக்களும் நம்பிக்கையுடன் பணம் கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.  இவர் 200 பேரிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்து சீட்டு நடத்தி வந்துள்ளார். 2017 ம் ஆண்டுதிருச்சி போலீஸ் கமிஷ்னர் தீபாவளி முடிந்து, தீபாவளி பண்ட்-ல் சேர்ந்த பொதுமக்களிடமும், ஏலச்சீட்டில் சேர்ந்தவர்களிடமும் பணம் வசூல் செய்துள்ளார். ஏலச்சீட்டு முடிவடைந்த நிலையில் சீட்டு கட்டியவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்ததால் பொதுமக்கள் அனைவரும் அவரைப் பணம்கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து வசூல் செய்த தொகையுடன் தங்கம் தலைமறைவாகி விட்டார். 

இதுதொடர்பாக உறையூரைச் சேர்ந்த சகாயராஜ் என்பவர், திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், திருச்சி மாநகரக் குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தங்கம், உறையூர் வந்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தங்கத்தை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ், ``பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமோ, முன்பின் தெரியாத நபர்களிடமோ பொதுமக்கள், ஏலச்சீட்டு அல்லது தீபாவளிச் சீட்டு என்ற பெயரில் பணம் கட்டி ஏமாற வேண்டாம். மேலும், செலுத்தும் தொகையைவிட அதிகப் பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறுவோரிடமும் பணம் கட்டிவிட்டு ஏமாற வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.              

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்