மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகரும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதனை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதன்

இதுதொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து செல்லதுரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் ஆஜராவதற்காக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் டெல்லி சென்றார். வழக்கை முடித்துவிட்டு வரும்போது சென்னை விமான நிலையத்தில், 20.6.2018 அன்று இரவு 12 மணியளவில் மப்டியில் வந்த போலீஸார் அவரைக் கைது செய்து, போலீஸ் வேனில் தூத்துக்குடி அழைத்துச் சென்றனர்.

ஸ்டெர்லைட் பாதிப்பே பரவாயில்லை என நினைக்கும் அளவுக்கு தூத்துக்குடி மக்களுக்கு போலீஸ் தொல்லை, அச்சுறுத்தல் தொடர்கிறது. கிராம போராட்டக்குழுவினர் பலர் இன்றுவரை தலைமறைவாக உள்ளனர். கிராமங்களில் ஆண்கள், இளைஞர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. பெண்கள் இரவில் போலீஸாருக்குப் பயந்து மாதா கோயிலில் தங்குகின்றனர். உயர் நீதிமன்றம் இப்படி சட்ட விரோதக் கைதுகளைச் செய்யக்கூடாது என உத்தரவிட்டும் அதை மதிக்காமல் தொடர்ந்து போலீஸார் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவுக்கு சட்ட உதவிகளைச் செய்ததற்காக பழிவாங்கும் நோக்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலர் வழக்கறிஞர் அரிராகவன் மீதும், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் இருபதுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகளை புனைந்துள்ளனர். இதை அம்பலப்படுத்தி இருவரும் சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடும் பொழுதெல்லாம், அவர்களுக்குப் பாதுகாப்புக் கேடயமாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் களத்திலும், சட்ட ரீதியாகவும் போராடியுள்ளது. வாழ்வுரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு சட்ட உதவிகளையும் போராட்டத்துக்கு ஆதரவு தருவது குற்றமல்ல. அது வழக்கறிஞர்களின் கடமை. அதற்காக கைது, சிறை, பொய் வழக்கு என்றால் அதை அனைவரும் ஒன்று திரண்டு போராடி முறியடிக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் மீது போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!