`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்!' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியது என்ன? #VikatanExclusive

இந்த நிமிடம் வரையில் இந்தக் கூட்டணியை ஸ்டாலின் இறுதி செய்யவில்லை. அதுதான் ராகுல் மனதில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது" என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்.

`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்!' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியது என்ன? #VikatanExclusive

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன். `மூன்றாவது அணியை நோக்கி ஸ்டாலின் போகும்போது, நாம் ஓர் அணியை உருவாக்குவோம். இந்த அணிக்குள் அன்புமணியும் தினகரனும் வருவார்கள்' என ராகுலிடம் தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன். 

அகில இந்திய அளவில் அரசியல் சந்திப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அண்மையில் கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்து, காவிரி நீர் குறித்து கமல்ஹாசன் வலியுறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேசினார் கமல். இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்களைத்தாம் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது. `` ராகுல் உடனான சந்திப்பில், அரசியல் விஷயங்கள் எதுவும் பேசப்படவில்லை எனத் தெரிவித்தார் கமல். ஆனால், தமிழக அரசியல் நிலவரம் குறித்துத்தான் நீண்டநேரம் விவாதித்துள்ளனர். இந்தச் சந்திப்பின் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன" என விவரித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்,

`` 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. இந்தத் தேர்தலில் மெகா கூட்டணி உருவானதால், காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் குறைக்கப்பட்டன. அதுவே, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 16 இடங்களை தி.மு.க ஒதுக்கியது. இதே எண்ணிக்கையிலான தொகுதிகளை அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுவிட வேண்டும் என நினைக்கிறார் ராகுல். அதாவது, `தி.மு.க-வுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டால், பத்து இடங்களுக்கு மிகாமல் தொகுதிகளைப் பெற வேண்டும்' என உறுதியாகக் கூறிவிட்டார். `மீண்டும் தி.மு.க-வுடன் கூட்டணி' என்ற கனவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இருந்தாலும், இந்த நிமிடம் வரையில் இந்தக் கூட்டணியை ஸ்டாலின் இறுதி செய்யவில்லை. அதுதான் ராகுல் மனதில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது" என்றவர், 

கமல் - ராகுல் சந்திப்பு

`` மூன்றாவது அணியை முன்னெடுக்கும் மம்தா, சந்திரசேகர ராவ் பக்கம் ஸ்டாலின் கவனத்தைச் செலுத்துவதால், `நாம் ஏதாவது ஒரு முடிவை எடுத்தாக வேண்டும்' என்ற மனநிலையில் இருக்கிறார் ராகுல்காந்தி. திருமாவளவனைச் சந்தித்தபோதும், `நாங்கள்தாம் கூட்டணிக்குத் தலைமை தாங்குவோம். தி.மு.க எங்கள் அணியில் இருக்கும்' எனக் கூறியிருக்கிறார் ராகுல். இதுகுறித்துப் பேசிய திருமாவளவனும், `தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையிலான அணியில் இருப்போம்' என்றார். இந்த வார்த்தைகளையும் சந்திப்புகளையும் அறிவாலயம் ரசிக்கவில்லை. கமலைச் சந்தித்ததற்குக் காரணம், `மூன்றாவது அணியை நோக்கி ஸ்டாலின் சென்றால், தமிழ்நாட்டில் கமல் உள்ளிட்ட சிலரையும் அணிக்குள் இணைத்துக்கொள்ளலாம்' என நினைக்கிறார் ராகுல். நேற்று நடந்த சந்திப்பில், `கருணாநிதி அளவுக்கு ஸ்டாலினுக்குச் செல்வாக்கு இருக்கிறதா?' என்ற பேச்சும் வந்துள்ளது. 

ராகுலிடம் பேசிய கமல், `அன்புமணி ராமதாஸும் தினகரனும் என்னுடன்தான் இருக்கிறார்கள். அவர்களையும் என்னுடன் அழைத்து வர முடியும்' எனக் கூறினார். மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைத்த காவிரி கூட்டத்தில் கலந்துகொண்டதை வைத்துக்கொண்டு இவ்வாறு சொன்னார் கமல். தொடர்ந்து பேசியவர், `எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படாமல் இருக்கிறது. இது பா.ஜ.க-வின் அரசு. இந்த அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டும்' என்றார். அப்போது, தினகரனைப் பற்றிப் பேசிய ராகுல், `அவரை நம்முடன் சேர்த்துக்கொண்டால், சசிகலாவின் நெகட்டிவ் இமேஜ் நமக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா?' எனக் கேட்டிருக்கிறார். `அதைப் பற்றி இப்போது நாம் கவலைப்பட வேண்டாம். தேர்தல் நேரத்தில் அதைப் பார்த்துக்கொள்வோம். நான் உங்களுடன் இருக்கிறேன். எனக்கு எந்தவிதமான நெகட்டிவ் இமேஜும் இல்லை. நீங்கள் அகில இந்திய அளவில் அணியைக் கட்டமைக்கும் வேலையில் இறங்குங்கள்' எனக் கூறினார். இதை ராகுலும் ஆமோதித்து ஏற்றுக்கொண்டார். அறிவாலயம் எடுக்கக்கூடிய அடுத்தகட்ட முடிவுகளையொட்டியே காங்கிரஸ் தலைமையின் அரசியல் நகர்வுகளும் அமையப் போகின்றன" என்றார் விரிவாக. 

அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகளின் மூலம், மக்கள் நீதி மய்யத்தை லைம் லைட்டில் வைத்திருக்க நினைக்கிறார் கமல். நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்படும் கூட்டணி மேடையில் யார் யாரெல்லாம் அமர்ந்திருப்பார்கள் என்ற வாதமும் காங்கிரஸ் கட்சிக்குள் களைகட்டத் தொடங்கிவிட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!