வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (21/06/2018)

கடைசி தொடர்பு:14:33 (21/06/2018)

`மோசமான முன்னுதாரணம்..!' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் வழங்கிய மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததுக்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்போது மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாகக் காவல்துறையினர் 7 பேரை கைது செய்தனர். முதலில் இவர்கள் 7 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்பு இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கால், அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 

கைது செய்யபட்டவர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை தமிழக அரசு சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு சமீபத்தில் உச்சநீதின்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசுக்கு மத்திய அரசு பதில் கூற வேண்டும் என உத்தரவிட்டு அதற்கான காலக்கெடுவையும் உச்சநீதிமன்றம் விதித்திருந்தது. 

பின்னர் இரு தினங்களுக்கு முன்னர் தமிழக அரசின் கடிதம் குடியரசுத் தலைவரிடம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அவர் ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலையை நிராகரித்துவிட்டார். இதைத்தொடர்ந்து தற்போது தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தற்கான விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் சார்பில் உள்துறை அமைச்சம் இந்த விளக்கத்தைத் தெரிவித்துள்ளது. அதில், ‘உள்நாட்டில் உள்ள மூன்று பேர் வெளிநாட்டினர் 4 பேருடன் கூட்டணி வைத்துக்கொண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்துள்ளனர். இது மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 காவல் துறையினர் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கைதானவர்களுக்கு சட்டத்துக்கு உட்பட்டே மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. ஆனால், அது பிற்காலத்தில் ஆயுள் தண்டையாக மாற்றபட்டது. தற்போது இவர்களை விடுதலை செய்தால் அது குற்றம் செய்பவர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும். எனவேதான் இந்த மனு நிகாரிப்பு செய்யப்பட்டது’ எனக் கூறப்பட்டுள்ளது.