வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்!

கைது

சென்னையில் போலீஸ் ஏட்டை பாட்டிலால் குத்திய பீட்சா டெலிவரி செய்யும் வாலிபரை போலீஸார் கைதுசெய்தனர். 

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்.  இவர், கொளத்தூர் பகுதியில் உள்ள பீட்சா விற்பனைக் கடையில் டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறார். நேற்றிரவு 10.30 மணியளவில் வேலையை முடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். பாடி மேம்பாலம் அருகில், கொரட்டூர் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டனின் பைக்கை போலீஸார் வழிமறித்தனர். அவரிடம் விசாரித்தபோது குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, மணிகண்டனை கொரட்டூர் போலீஸ் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். குடிபோதையில் இருந்த மணிகண்டன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, பைக்கை ஸ்டேஷனில் விட்டுவிட்டு வீட்டுக்குச் செல்லும்படி போலீஸார் மணிகண்டனிடம் தெரிவித்தனர். ஆனால், அவர், அதற்குச் சம்மதிக்கவில்லை. ஏட்டு சித்துராஜ் என்பவர் மணிகண்டனிடம் பேசிக்கொண்டிருந்தார். 

இந்த நிலையில் திடீரென மணிகண்டன், அந்தப் பகுதியில் கிடந்த  பாட்டிலை எடுத்து ஏட்டு சித்துராஜைக் குத்தினார். இதில் ஏட்டுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதைப்பார்த்த சக போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சித்துராஜிக்கு முகம், உதட்டில் தையல் போடப்பட்டுள்ளது. மணிகண்டனை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

 போலீஸ் நிலையத்திலேயே ஏட்டை பாட்டிலால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!