வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (21/06/2018)

கடைசி தொடர்பு:21:44 (21/06/2018)

`ட்ரம்ப்பையோ கிம்மையோ சந்திக்கட்டும்; எங்களுக்குக் கவலை இல்லை' - கமலை கலாய்த்த ஜெயக்குமார்!

கமல்ஹாசன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையோ வடகொரிய அதிபர் கிம் ஜாங்கையோ சந்தித்தால்கூட எங்களுக்குக் கவலையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

ஜெயக்குமார்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஐக்கிய ஜனநாயயக் கூட்டணியின் தலைவருமான சோனியாவை இன்று சந்தித்துப் பேசியிருந்தார்.சந்திப்பில் கூட்டணி குறித்துப் பேசவில்லை. தமிழக அரசியல் நிலவரம் குறித்து மட்டுமே பேசினோம் என இருதரப்பும் விளக்கம் அளித்தது. எனினும், இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராகுல் காந்தி, சோனியா காந்தியைக் கமல்ஹாசன் சந்தித்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர்,  ``அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையோ அல்லது வடகொரிய அதிபர் கிம் ஜாங்கையோ சந்தித்தால்கூட எங்களுக்குக் கவலையில்லை. அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அது அவருடைய உரிமை. அதை நாங்கள் பொருட்படுத்தப்போவதில்லை" என்று கூறினார். 

முன்னதாக, சேலம் 8 வழி பசுமைச் சாலை குறித்து கேள்வி கேட்டதற்கு, ``தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு அடிப்படை வசதிகள் முக்கியமானது. மற்ற மாநிலங்களுக்கு இணையாகத் தமிழகத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிக்காகத்தான் திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக ஏதாவது பிரச்னை இருந்தால் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மக்கள் முறையிடலாம். எனினும், இத்திட்டம் குறித்து அரசுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. மத்திய, மாநில அரசைப் பொறுத்தவரை மக்களின் நலனுக்காகவே இணக்கமாகச் செல்கிறோம். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு இதில் எந்த நலனும் கிடையாது" எனப் பதிலளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க