வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (21/06/2018)

கடைசி தொடர்பு:16:40 (21/06/2018)

பள்ளத்தில் விளையாடிய 2 சிறுமிகளுக்கு நேர்ந்த துயரம்! சிக்கிக்கொண்ட அ.தி.மு.க பிரமுகர்கள்

Students death

ஆழமான பள்ளத்தில் விளையாடியபோது, மணல் சரிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். குழி தோண்டி மணலை விற்பனைசெய்த அ.தி.மு.க பிரமுகர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

பலியான சிறுமிகள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள ராஜகோபாலபுரத்தில், வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் வசிக்கிறார்.  இவரது வீட்டுக்கு உறவினர்களான கும்பகோணம் ஆணைக்காரன்பாளையத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மகள் வர்ஷினியும், சுதாகர் மகள் சியாமளாவும் விடுமுறைக்காக வந்திருந்தனர். வர்ஷினியும், சியாமளாவும் ராமமூர்த்தி வீட்டுக்கு அருகில் உள்ள, ஆழமாக மண் எடுக்கப்பட்ட, கொம்புக்காரன் குட்டையில் இறங்கி விளையாடிக்கொண்டிருந்தனர்.  அப்போது, அந்தக் குழியில் மண் சரிவு ஏற்பட்டு, அதில் மாணவிகள் இருவரும் சிக்கி அலறினர்.  மாணவிகளின் சப்தம் கேட்டு, உறவினர்கள் விரைந்துசென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவிகளை மீட்டு, சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.  ஆனால், செல்லும் வழியிலேயே வர்ஷினியும் சியாமளாவும் பரிதாபமாக இறந்தனர்.

குட்டையில் மண் எடுத்து, அதனை விற்று சம்பாதித்த அ.தி.மு.க பிரமுகர்கள் மணிவாசகம், சண்முகம் ஆகியோர் அந்தக் குழியை மூடாமல் விட்டுச் சென்றதே, மாணவிகள் உயிரிழப்புக்கு காரணம் என்றும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி மாணவிகளின் உறவினர்கள் சாலைமறியல்செய்தனர். உடனே, குத்தாலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மண் எடுத்த பின் குழியைச் சரிசெய்யாமல் விட்டுச் சென்ற அ.தி.மு.க பிரமுகர்கள்மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.  அதன்படி மண் எடுத்து குழியைச் சரிசெய்யாமல் விட்டுச் சென்ற, மாணவிகளின் இறப்புக்குக் காரணமான அ.தி.மு.க பிரமுகர்கள் மணிவாசகம், சண்முகம் ஆகியோரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.