வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/06/2018)

கடைசி தொடர்பு:19:00 (21/06/2018)

`அணு உலையிலிருந்து சத்தம் வரும்... அச்சப்படாதீர்’ வளாக இயக்குநர் வேண்டுகோள்!

கூடங்குளம் அணுஉலையில் வெப்ப நீர் அழுத்த சோதனை நடைபெற இருப்பதால், இரு தினங்களுக்கு சத்தம்வரும் என்றும் அதனால் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை எனவும் கூடங்குளம் வளாக இயக்குநர் டி.எஸ்.சௌத்ரி தெரிவித்தார்.

கூடங்குளம் அணு விஞ்ஞானிகள், இரண்டாவது உலையில் வெப்ப நீர் அழுத்தச் சோதனை நடத்த இருப்பதால், இரு தினங்களுக்கு சத்தம் வரும் என்றும், அதனால் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை எனவும் வளாக இயக்குநர் டி.எஸ்.சௌத்ரி தெரிவித்தார்.

கூடங்குளம்

கூடங்குளத்தின் இரண்டாவது அணுஉலையின் செயல்பாடு, கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நிறுத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பும் பணியும் பராமரிப்புப் பணியும் நடைபெற்றது. இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எரிபொருள் நிரப்புதல் மற்றும் பராமரிப்புப் பணிகள் முடிவடைய இருக்கும் நிலையில், வெப்ப அழுத்தச் சோதனைகளை நடத்த விஞ்ஞானிகள் முடிவுசெய்துள்ளனர். 

இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநரான டி.எஸ்.சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கூடங்குளம் இரண்டாவது  உலையில் எரிபொருள் நிரப்பும் பணியும் பராமரிப்புப் பணியும் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அத்தியாவசியமான சில சோதனைகளை நடத்த வேண்டியதிருக்கிறது. 

கூடங்குளம் அணு உலை

அதன்படி, வரும் 22 மற்றும் 23-ம் தேதிகளில், வெப்பநீர் அழுத்தச் சோதனை நடைபெற இருக்கிறது. இந்தச் சோதனையின்போது வால்வுகள் திறக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அதனால், கூடங்குளம் வளாகத்தில் பயங்கர சத்தம் ஏற்படும். சில நிமிட நேரத்துக்கு இந்த சத்தம் நீடிக்கும். வால்வுகள் திறக்கப்படும்போதெல்லாம் இந்தச் சத்தம் கேட்கும் என்பதால், சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. பகலில் மட்டுமே இந்தச் சோதனையை நடத்த முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. 

தற்போது, கூடங்குளம் முதல் உலையின் முழுக் கொள்ளளவான 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் இருந்து இதுவரை 20,156 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டுள்ளது. கடந்த 19-ம் தேதி வரை இரு அணுஉலைகளிலும் சேர்த்து மொத்தமாக 26,776 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பன்டிருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.