`வி.ஐ.பி-க்களின் குடும்ப நிலங்கள் குறிவைக்கப்படுகின்றனவா?' - சர்ச்சையில் நில உச்சவரம்பு சட்டம் | Is land acquisition bill targeting VIPs family lands

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (21/06/2018)

கடைசி தொடர்பு:17:29 (21/06/2018)

`வி.ஐ.பி-க்களின் குடும்ப நிலங்கள் குறிவைக்கப்படுகின்றனவா?' - சர்ச்சையில் நில உச்சவரம்பு சட்டம்

நில உச்ச வரம்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் இறங்கியுள்ளது தமிழக அரசு. தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இதற்கான கணக்கெடுப்புப் பணிகள் நடந்து வருகின்றன. `பாரம்பர்யமாக நிலங்களை வைத்திருக்கும் வி.ஐ.பி-க்களின் நிலங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவற்கான பணிகள் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது' என்கின்றனர் டெல்டா பகுதி விவசாயிகள்.

நில உச்சவரம்பு சட்டம்

ஜி.கே.மூப்பனார்மத்திய அரசு 1958-ம் ஆண்டு நில உச்ச வரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, `ஒரு தனிநபர் அதிகபட்சம் 15 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். அவரின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 15 ஏக்கர் நிலம் இருக்கலாம். அந்த வகையில் ஒரு குடும்பத்திடம் அதிகபட்சம் 30 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது' என வரையறுக்கப்பட்டது. அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருந்த மிராசுதார்கள், ஜமீன்கள் தங்களது நிலங்களை மருத்துவமனைகள், கல்லூரிகள், கோயில்கள் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்கு எழுதி வைத்தனர். இன்னும் பலர் அறக்கட்டளைகளை உருவாக்கி அதன் பேரில் தங்களது நிலங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். அதன்பிறகு இந்தியாவில் நில உச்ச வரம்பு சட்டம் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வசதி படைத்தவர்கள் தங்களது பெயரிலும் தங்கள் குடும்பத்தினரின் பெயரிலும் ஏராளமான நிலங்களை வாங்கிக் குவித்தார்கள். இந்தநிலையில்தான் தமிழக அரசு நில உச்ச வரம்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

கும்பகோணம் மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள பதிவேடுகள் மூலம் நிலங்களின் அளவை கணக்கிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்திடம் 30 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தால், அதை அரசு கையகப்படுத்தும். அறக்கட்டளை பெயரில் இருந்தால், அதன் செயல்பாடுகள், மக்கள் சேவை பயன்பாடுகள் ஆகியவை தீவிரமாக ஆய்வு செய்யப்படும். இதனால் அறக்கட்டளை என்ற பெயரிலும் நிலங்களை தக்க வைத்துக்கொள்ள முடியாது. இதனால் இப்பகுதிகளில் உள்ள நில உடைமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். குறிப்பாக, ஜி.கே.மூப்பனாரின் குடும்ப நிலங்கள் மற்றும் இக்குடும்பத்தினர் நடத்தி வரும் அறக்கட்டளைக்குச் சொந்தமான  நிலங்களைக் குறி வைத்துதான் தமிழக அரசு இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சுப்பிரமணியன் சுவாமிமுயற்சிகளில் இறங்கியிருப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய விவசாயி கிருஷ்ணமூர்த்தி, `` சுந்தரப்பெருமாள் கோயில், கபிஸ்தலம் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் மூப்பனார் குடும்பத்துக்கு ஏராளமான நிலங்கள் இருந்தன . இவற்றில் பெரும்பாலானவை குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவர்கள் நடத்தி வரும் புலியூர் நாகராஜன் ஸ்ரீ வெங்கடாஜலபதி அன்னதான டிரஸ்ட் அறக்கட்டளை பெயரிலும் ஏராளமான நிலங்கள் உள்ளன. இந்நிலையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க-வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி இந்த நிலங்களை சட்டபூர்வமாக மீட்கப்போகிறேன் எனக் கூறி, பரபரப்பை புலியூர் நாகராஜன்கிளப்பினார். ஸ்ரீவெங்கடாஜலபதி அன்னதான டிரஸ்ட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தும் முயற்சியிலும் இறங்கினார். ஆனால், அப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்ததால், சுப்பிரமணியன் சுவாமியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போடப்பட்டது. கபிஸ்தலத்துக்குள் சுப்பிரமணியன் சுவாமி நுழையவும் தி.மு.க ஆட்சியில் தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசில் சுவாமியின் ஆதிக்கம் இருப்பதால், அவரது தூண்டுதலின் பேரிலேயே நில உச்ச வரம்பு சட்டத்தைப் பயன்படுத்தி மூப்பனார் குடும்பம் மற்றும் அவரின் உறவினர்களுக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகளில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலங்களை கையகப்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் போகிறார்கள் எனவும் தகவல் வருகிறது" என்றார்.

இதுகுறித்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜனிடம் கருத்து கேட்டபோது, ``நில உச்ச வரம்பு சட்டத்துக்குப் புறம்பாக மூப்பனார் குடும்பத்தினரிடம் ஒரு சென்ட் நிலம்கூட கூடுதலாக இல்லை. இவர்கள் நடத்தி வரும் அறக்கட்டளை ஏழை எளிய மக்களுக்கு  பலவிதமான உதவிகளை செய்து வருகிறது. ஜி.கே.மூப்பனாரின் குடும்பத்தார் அனைவருமே சட்டத்தை மதித்து நடப்பவர்கள். பத்தாண்டுகள் மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன் மீது ஒரு சிறு ஊழல் குற்றச்சாட்டுகூட கிடையாது. நில உச்ச வரம்பு சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி இவர்களின் குடும்பத்தினர் மீது களங்கம் ஏற்படுத்த முயன்றால் நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்” என்றார் ஆவேசமாக.