வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (21/06/2018)

கடைசி தொடர்பு:19:20 (21/06/2018)

அமெரிக்க ஆப்பிள் உள்ளிட்ட பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி!

அமெரிக்காவிலிருந்து இறக்குமதிசெய்யப்படும் ஆப்பிள், பருப்பு வகைகள், உலோகப் பொருள்கள் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதிசெய்யப்படும் ஆப்பிள், பருப்பு வகைகள், உலோகப் பொருள்கள் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

அமெரிக்கா, சீனா இடையே கடும் வர்த்தகப் போர் ( Trade war) நடந்துவருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பல்வேறு பொருள்கள் மீதான இறக்குமதித் தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கொண்டைக் கடலை, கடலைப் பருப்பு ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள  இறக்குமதித் தீர்வை  தற்போதுள்ள  30  சதவிகிதத்திலிருந்து  60 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பவுண்டரிகளில் பயன்படுத்தப்படும்  மோல்டுகள், போரிக் ஆசிட் பவுடர்  ஆகியவற்றின் மீதான வரி 7.5 சதவிகிதமும், ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்களுக்கான  தீர்வை  10 சதவிகிதமும், ஆர்ட்மியா, ஷிரிம்ப் ஆகிய பொருள்களுக்கு 15 சதவிகிதமும்  அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி

மேலும், சத்துமிகுந்த பருப்புகள், இரும்பு, உருக்குப் பொருள்கள், ஆப்பிள், துருப்பிடிக்காத ஸ்டீல் பொருள்கள், அலாய் ஸ்டீல், டியூப், பைப் ஃபிட்டிங்ஸ், ஸ்க்ரூ, போர்ட், ரிவிட்ஸ் ஆகியவற்றின் மீதான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் மோட்டார் சைக்கிள், இருசக்கர வாகனங்கள் மீதான வரி உயர்த்தப்படவில்லை.

 உலக வர்த்தக மையத்தில், 30 வகையான பொருள்களுக்கான வரியை மாற்றியமைத்து, 50 சதவிகிதம் வரை உயர்த்தப்போவதாகக் கடந்த வாரம் இந்தியா அறிவித்தது.  இதைத் தொடர்ந்து, வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் அலுமினியம், ஸ்டீல் பொருள்கள்மீது 241 மில்லியன் டாலர் வரி விதிக்க உள்ளதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. அமெரிக்காவின் இந்த  அறிவிப்பால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும்  ஸ்டீல் பொருள்களுக்கு 198.6 மில்லியன் டாலர்களும், அலுமினியத்தில் 42.4 மில்லியன் டாலர்களும் இழப்பு ஏற்படும் என்று இந்தியா தெரிவித்திருந்தது. ஆனால்,  இதை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.