போலீஸை நம்பாமல் களத்தில் இறங்கினார்! - ஃபேஸ்புக் மூலம் திருடனைப் பிடித்த சென்னை வாலிபர்

ஃபேஸ்புக்

சென்னையில் ஐ போனைத் தொலைத்த மருந்து விற்பனை பிரதிநிதி, தன்னுடைய நண்பர்கள் உதவியால் ஃபேஸ்புக் மூலம் திருடனைக் கண்டுபிடித்துள்ளார்.

சென்னைப் பெரம்பூரைச் சேர்ந்தவர் சிமியோன். இவர், மருந்து விற்பனை பிரதிநிதி. இவருக்கு நீண்ட காலமாக ஐ போன் வாங்க வேண்டும் என்ற ஆசை. 27,000 ரூபாய் மதிப்பிலான ஐ போனை இஎம்ஐ மூலம் அவர் வாங்கினார். இன்னமும் மூன்று மாதங்கள் இஎம்ஐ செலுத்தவேண்டியுள்ளது. இந்தநிலையில் சிம்கார்டு தொடர்பாகப் புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் அலுவலகத்துக்குக் கடந்த 13 ம் தேதி சென்றார். அப்போது, அவரின் செல்போன் திருட்டுப்போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் வழக்கம்போல மனு ஏற்புச் சான்றிதழை மட்டும் கொடுத்தனர். ஆனால், செல்போன் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் வேதனையடைந்த சிமியோன், தன்னுடைய நண்பர் ஜாபரிடம் ஐடியா கேட்டார். ஜாபர், பொறியாளர் என்பதால், சில வழிமுறைகளைத் தெரிவித்தார். அதன் மூலமாகவும் செல்போனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் போலீஸை நம்பாமல், தானே களத்தில் இறங்கி செல்போனை கண்டுபிடிக்க சிமியோன் முடிவு செய்தார். 

இதற்காக, புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் அலுவலகத்துக்குச் சென்று செல்போன் திருட்டுப் போன நேரத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஜாபரும், சிமியோனும் பார்வையிட்டனர். அப்போது, வடமாநில இளைஞர் ஒருவர் சிமியோனின் செல்போனைத் திருடும் காட்சிகள் இடம் பிடித்திருந்தன. இதனால், அந்த வாலிபர் எதற்காக வந்தார் என்று செல்போன் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர் சிம்கார்டு தொடர்பாக வந்த தகவல் தெரிந்தது. தொடர்ந்து அந்த வடமாநில வாலிபரின் செல்போன் நம்பரை பெற்ற சிமியோன் அந்த நம்பரில் தொடர்பு கொண்டார். ஆனால், அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. சுவிட்ச் ஆப் என்று பதில் வந்ததால் வேதனையடைந்தார். 

 ஜாபர்- சிமியோன்

இருப்பினும் விடாமுயற்சியாக, அந்த செல்போன் நம்பரை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வடமாநில வாலிபரின் விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். ஃபேஸ்புக்கில் பதிவு செய்தபோது, அந்த வடமாநில வாலிபர் குறித்த விவரங்கள் கிடைத்தன. இதனால் சிமியோனும் ஜாபரும் மகிழ்ச்சியடைந்தனர்.  ஃபேஸ்புக் மெஜேஞ்சர் மூலம் வடமாநிலத்தின் புகைப்படம் கிடைத்தது. அந்தப் புகைப்படத்தின் உதவியோடு, அடுத்த தேடுதல் வேட்டை நடந்தது. இறுதியில் வடமாநில இளைஞர் மாதவரத்தில் தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்ற சிமியோனும் ஜாபரும், செல்போனைத் திருடிய வடமாநில வாலிபரைக் கண்டுபிடித்தனர். பிறகு அவரை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். செல்போன் கிடைத்த மகிழ்ச்சியில் சிமியோன், ஜாபரும் உள்ளனர். 

இதுகுறித்து ஜாபரிடம் கேட்டதற்கு, ஃபேஸ்புக் மெசேஞ்சரில் வடமாநில வாலிபரின் புகைப்படம், பெயர் பங்கஜ்சர்மா என்று தெரிந்தது. ஆனால் அவர் ஃபேஸ்புக்கில் லைவ்வில் இல்லை. இதனால் அவர் குறித்து கூடுதல் தகவல் கிடைக்கவில்லை. அவரின் புகைப்படத்துக்கு கமென்ட்ஸ் போட்டவர்களுக்கு பங்கஜ்சர்மா குறித்த தகவல்களை இந்தியில் கேட்டோம். 5 பேருக்குத் தகவல் அனுப்பியிருந்தோம். அதில் ஒருவர் மட்டும் பங்கஜ்சர்மாவின் இரண்டு செல்போன் நம்பர்களை அனுப்பியிருந்தார். ஆனால், அதுவும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு, எங்களுக்கு போன் நம்பர் அனுப்பியவரிடம் உங்களின் நண்பருக்கு நல்ல வேலை வாய்ப்பு எங்களிடம் உள்ளது. அதற்காகத்தான் அவரைத் தேடுகிறோம் என்று மீண்டும் மெசேஜ் அனுப்பினோம். மூன்று நாளுக்குப் பிறகு இன்னொரு நம்பரைக் கொடுத்தார். அந்த நம்பரில் தனியார் வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பேசுவது போல பேசி கடந்த 19 ம் தேதி அவரின் முகவரி, விவரங்களைக் கேட்டோம். ஆனால், எங்களின் பேச்சில் உஷாரான பங்கஜ்சர்மா, மாதவரம், டேங்க், பர்னீச்சர் கம்பெனி என்று மட்டும் சொல்லிவிட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். இதனால், நண்பர்கள் உதவியோடு 20 ம் தேதி மாதவரத்தில் பங்கஜ்சர்மாவைத் தேடினோம். அவரின் புகைப்படத்தால் கண்டுபிடித்தோம். முதலில் செல்போனைத் திருடியதை அவர் ஒத்துக்கொள்ளவில்லை. போலீஸில் புகார் கொடுத்திருப்பதையும் சிசிடிவி கேமரா காட்சிகள் என விவரத்தை தெரிவித்த பிறகு செல்போனை எங்களிடம் கொடுத்தார். தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார். ஆனால், நாங்கள் அவரையும் செல்போனையும் போலீஸிடம் ஒப்படைத்துள்ளோம். நீதிமன்றம் மூலம் போனை விரைவில் மீட்டுவிடுவோம்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!