போலீஸார், வங்கி அதிகாரிகளை அலறவிட்ட செக் மோசடி மன்னன் 

செக் மோசடி

சென்னை நீலாங்கரையில், நூதன முறையில் செக் மோசடிமூலம் பணம் பறிப்புக் குற்றத்தில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னை கொட்டிவாக்கம் கற்பகாம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. இவர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை  இன்னொரு வங்கிக் கணக்குக்கு மாற்றினார். இதற்காக அவர், கடந்த மே மாதம் 28-ம் தேதி, வங்கியில் செக் கொடுத்தார். இந்த நிலையில், பணம் எடுக்கப்பட்ட தகவல் எஸ்.எம்.எஸ் மூலம் சித்ராவின் செல்போனுக்கு வந்தது. ஆனால், அவர் பணம் மாற்ற விரும்பிய வங்கியின் கணக்கில் அந்தப் பணம் மாற்றப்படவில்லை. இதுகுறித்து வங்கியில் தகவல் தெரிவித்தார். 

 அதோடு, நீலாங்கரை போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நடராஜன் விசாரணை நடத்தினார்.  விசாரணையில், 2014 -ம் ஆண்டு செக் மோசடியில் ஈடுபட்டுக் கைதான  சுரேஷ் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், சித்ரா வங்கிக்குச் சென்ற தினத்தில் சுரேசும் அங்கு வந்தது சிசிடிவி கேமரா பதிவின்மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. சுரேஷிடம் போலீஸார் விசாரித்தனர். 

விசாரணையில், சுரேஷ்தான் சித்ராவின் செக்கை நூதன முறையில் மோசடிசெய்திருப்பது தெரியவந்தது. இதனால், சுரேஷை போலீஸார் கைதுசெய்தனர். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், வங்கிகளில் செக் டெபாசிட் செய்ய வரும் வாடிக்கையாளர்களை சுரேஷ் நோட்டமிடுவார். பிறகு வாடிக்கையாளர்கள், செக்கை வங்கியில் உள்ள டெபாசிட் பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றபிறகு, அதை யாருக்கும் தெரியாமல் எடுப்பார். பின்னர், அந்தச் செக்கில் உள்ள பெயரை மாற்றி பணத்தை எடுத்துக்கொள்வார். இதுதான் சுரேஷின் ஸ்டைல். சித்ராவின் செக்கை எடுத்த சுரேஷ், அதை சிதம்பரம் என மாற்றி திருவான்மியூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மாற்றியுள்ளார். இந்த மோசடியில், வங்கி ஊழியர்களின் உதவி இல்லாமல் இந்த மோசடி நடைபெற சாத்தியமில்லை. எனவே, வங்கித் தரப்பில் சுரேஷுக்கு  யார் உதவி செய்தார்கள் என்று விசாரித்துவருகிறோம். மேலும்,  அவரிடமிருந்து 85 ஆயிரம் ரூபாய், 3 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 3 வங்கி செக் புக், 3 ஏடிஎம் கார்டுகள், 3 ஓட்டுநர் உரிமம், 3 செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!