வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (21/06/2018)

கடைசி தொடர்பு:20:02 (21/06/2018)

தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டதா குடிநீர் விநியோகம்? - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சிக்கான குடிநீர் விநியோகத்துக்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் 400 மில்லியன் யூரோ மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கான குடிநீர் விநியோகத்துக்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் 400 மில்லியன் யூரோ மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள்மூலம் நாளொன்றுக்கு, 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை மக்களுக்கு  24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, 30 ஆண்டுகளுக்கு, 3,100 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தால், குடிநீர் கட்டணம் உயருமா... பொதுக் குழாய்கள் நீக்கப்படுமா... அப்படி பொதுக் குழாய்கள் நீக்கப்பட்டால், அதை நம்பியிருக்கும் மக்களின் நிலை என்ன? பணம் இருப்பவர்களுக்குத்தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுமா என்பன போன்ற பல்வேறு கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்பினர். மேலும் கோவை குடிநீர் விநியோகம், தனியார் மயமாக்கப்பட்டதுகுறித்து சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், "கோவையில் உள்ள குடிநீர்க் குழாய்கள், சேதமடைந்துள்ளதால், அவற்றை மாற்றியமைக்கவும் பராமரிக்கவும்தான் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம்தான் நியமிக்கும்" என்றார்.