வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (21/06/2018)

கடைசி தொடர்பு:21:40 (21/06/2018)

வங்கி அதிகாரிகள்மீது தாக்குதல் - கடன் வசூலின்போது நேர்ந்த சோகம்!

கனரா வங்கி

கடன் வசூலிக்கச் சென்ற இடத்தில், வங்கி மேலாளர் மற்றும் கடன்வசூல் அதிகாரியைத் தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி ஊழியர் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் தி.தமிழரசு, பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர், இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ``வேலூர் மாவட்டத்தில் உள்ள கனரா வங்கி ஒழுகூர் கிளையின் மேலாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரி பாலாஜி ஆகியோர், ஜூன் 19-ம் தேதி மாலை 5.30 மணியளவில் கடன் வசூலிக்கச் சென்ற இடத்தில், அவர்களை வங்கிக் கடன் பெற்றவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி, அவதூறாகப் பேசி தாக்கியுள்ளார். காயமடைந்த இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுள்ளனர்.

வங்கி கொடுத்த கடனை நியாயமாக வசூலிக்கச்சென்ற அதிகாரிகளை இழிவாகப் பேசி, தாக்கிய கிருஷ்ணமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும்போது, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அப்பாற்பட்ட காரணங்களால் ஏற்படும் அசௌகரியங்களுக்குக்கூட வங்கி ஊழியர்கள் - அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.  இவை, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இத்தகைய சம்பவங்களில், குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது விரைவாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.