`எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறைக்கு வராதது ஏமாற்றம்'- ஈஸ்வரன் வருத்தம்!

எய்ம்ஸ் மருத்துவமனை ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வராதது ஏமாற்றமளிப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை, ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வராதது ஏமாற்றமளிப்பதாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஈஸ்வரன்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ``மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது கொங்கு மண்டல மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாயக்கழிவு மற்றும் தோல் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு புற்றுநோய், மலட்டுத்தன்மை, தோல் நோய் உள்ளிட்ட இன்னும் பல்வேறு நோய்களால் கொங்கு மண்டல மக்கள் அதிக அளவில் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகிறார்கள். இந்த நோய்களைக் குணப்படுத்துவதற்காகத் தரம் வாய்ந்த சிகிச்சைகளைப் பெற மருத்துவமனைகளைத் தேடி கொங்கு மண்டல மக்கள் தொலைதூரம் சென்றுகொண்டிருக்கும் சூழலில்தான், மத்திய அரசு தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து, கள ஆய்வுகள் நடத்தி 5 இடங்களைத் தேர்வுசெய்தது. 

அந்த 5 இடங்களில், கொங்கு மண்டலமான ஈரோடு மாவட்டம் பெருந்துறையும் இடம்பெற்றது. பலதரப்பட்ட ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் ஈரோட்டில்தான் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் இருக்கிறது என்று வெளிக்காட்டியபோதும், மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.  பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால், எதிர்கால சந்ததிகளையாவது புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியும். எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறையில் ஏன் அமைக்கப்பட வேண்டுமென்ற உரிய விளக்கத்தைத் தமிழக அரசு மத்திய அரசிடம் தெளிவுபடுத்தியிருந்தால், மதுரைக்குப் போயிருக்காது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!