வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (21/06/2018)

கடைசி தொடர்பு:22:40 (21/06/2018)

ஸ்டெர்லைட் போராட்டம் எதிரொலி! - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சிறையில் அடைப்பு

சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன், விசாரணைக்குப் பின் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தூத்துக்குடியில் நடந்த விசாரணைக்குப் பின், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

வாஞ்சிநாதன் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, கடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற கலவரத்தைத் தூண்டியதாகவும், கலவரத்தில் ஈடுபட்டதாகவும் சிசிடிவி., கேமரா பதிவுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கைதுசெய்வதாகச் கூறி பலரையும் போலீஸார் கைதுசெய்துவருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகராக இப்போராட்டத்தின் துவக்கத்தில் இருந்தே மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் மக்கள்  உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்,  வழக்கறிஞர் அரிராகவன் ஆகியோரும் செயல்பட்டு வந்தனர். இவர்கள் இருவர் மீதும் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.    

இவர்களைப் பிடிக்க கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் தனி அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் தலைமையிலான குழு, நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்தனர். இவர்மீது சிப்காட் காவல் நிலையத்தில் ஐ.பி.சி., 147, 148, 188, 353, 506(11), 301 போன்ற பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை வாஞ்சிநாதனை சிப்காட் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.

 தூத்துக்குடி மாவட்ட ஜே.எம்-3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை  சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவப் பரிசோதனை செய்தால், உள்ளூர் வழக்கறிஞர்கள் அவரை சந்திக்க முற்படுவார்கள். அதனால்,ஏதும் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின், சிறையில் அடைக்கப்பட்டார். முன் ஜாமீன் கேட்டு, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க