மருத்துவ வசதியில் மத்திய மண்டலம் மிகவும் பின் தங்கியுள்ளது - எய்ம்ஸ் குறித்து ஆதங்கப்படும் சமூக ஆர்வலர்கள்

மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை, தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் அமையும் என இப்பகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்த்துவந்த நிலையில், மதுரை மாவட்டம் தோப்பூரில் இது அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது, மத்திய மண்டல மக்களைப் பெரிதும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறக்கூடிய வகையிலான அதிநவீன உயர் சிகிச்சை அளிக்கக்கூடிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஒன்றுகூட மத்திய மண்டலத்தில் தற்போது இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனையைப் பெரிதும் எதிர்பார்த்தோம்” என ஏமாற்றத்துடன் பேசுகிறார், தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஜீவக்குமார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர் ‘’மதுரையை உள்ளடக்கிய தென்மண்டல மக்களுக்கு எய்ம்ஸ் கிடைத்திருப்பதில் எங்களுக்கு எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மத்திய மண்டல மக்களின் நண்பர்கள், உறவினர்கள்தான் அங்கு இருக்கிறார்கள். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், மத்திய மண்டலத்தை ஒப்பிடும்போது, தென் மண்டலத்தில் ஏற்கெனவே மருத்துவ வசதிகள் போதிய அளவு உள்ளது. அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 6,208 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 6,225 படுக்கைகளும் உள்ளன. ஆனால் மத்திய மண்டல அரசு மருத்துவமனைகளில் 2,718 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 1,767 படுக்கைகள் மட்டுமே உள்ளன. 

தென் மண்டலத்தை ஒப்பிடும்போது, மத்திய மண்டல மாவட்டங்களில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறக்கூடிய அதிநவீன உயர் சிகிச்சை அளிக்கக்கூடிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஒன்றுகூட இல்லை. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகூட பல வகைகளிலும் சீரழிந்துகிடக்கிறது. தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூரை உள்ளடக்கிட மத்திய மண்டல மக்கள், உயர் சிகிச்சைகளுக்கு சென்னை, கோவை, மதுரை என நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில்தான், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்த்தோம். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தவுடன், முதலில் செங்கிப்பட்டிதான் மாநில அரசால் பரிந்துரைசெய்யப்பட்டது. இங்கு, மூலிகை வளங்களுடன்கூடிய சோலைவனமாக 490 ஏக்கர் நிலம் படர்ந்துவிரிந்துள்ளது. 

இங்கு எய்ம்ஸ் அமைக்கக் கோரி, மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த பெரும் புள்ளிகள் இருவர் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு, செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமைவதைத் தடுத்துவிட்டார்கள். மத்திய மண்டலத்தில் உள்ள அ.தி.மு.க, தி.மு.க பிரமுகர்கள் இந்த விசயத்தில் கொஞ்சம்கூட அக்கறை காட்டவில்லை. பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் எல்லாம் இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருக்கின்றன. அதுபோல, தமிழ்நாட்டில் மதுரை மற்றும் செங்கிப்பட்டியில் இரண்டு எய்ம்ஸ் அமைக்கலாம்” என்று யோசனை தெரிவித்தார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!