`சிகரெட் இல்லாமலிருந்தால் கூடுதல் அழகாக இருப்பீர்கள்' - விஜய்க்கு அன்புமணி அட்வைஸ்!

`சர்கார்’ படத்தின் போஸ்டரில் சிகரெட் இல்லாமலிருந்திருந்தால் கூடுதல் அழகாக இருந்திருப்பீர்கள் என அன்புமணி ராமதாஸ், நடிகர் விஜய்க்கு அட்வைஸ் கூறியுள்ளார்.

அன்புமணி

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. நாளை நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை 6 மணி அளவில் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. `சர்கார்' எனப் பெயரிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பதைப்போல வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் போஸ்டர் குறித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ``படத்தின் போஸ்டரில் `சிகரெட் இல்லாமல் இருந்திருந்தால் கூடுதல் அழகாக இருந்திருப்பீர்கள்'' என ட்வீட் செய்துள்ளார். 

அதேபோல தனது அடுத்த ட்வீட்டில்  `நடிகர் விஜய் படத்தின் போஸ்டர் சிகரெட் பிடிப்பதுபோல் வெளியாகியது அவமானமாக உள்ளது" என அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார். மேலும் இனி புகைபிடிக்க மாட்டேன் என ஏற்கெனவே விஜய் கூறியிருப்பதை அவர் தனது ட்விட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே சர்கார் படத்தின் அடுத்த போஸ்டர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!