துரத்திய தாசில்தார்... மின்னல் வேகத்தில் மணல் கடத்தல் வேன்... பறிபோன முதியவரின் உயிர் | Sand theft vehicle killed an old man in Tiruvannamalai

வெளியிடப்பட்ட நேரம்: 04:35 (22/06/2018)

கடைசி தொடர்பு:08:26 (22/06/2018)

துரத்திய தாசில்தார்... மின்னல் வேகத்தில் மணல் கடத்தல் வேன்... பறிபோன முதியவரின் உயிர்

திருவண்ணாமலையில் மணல் கடத்திச் சென்ற வேன் மோதி 60 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தச்சூர் கிராமத்தின் குறுக்கே செய்யாறு மற்றும் நாகநதி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் அதிக அளவில் மணல் கடத்தல் நடந்துவருகிறது. இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடக்கிறது. நேற்று காலை வருவாய்த்துறை தாசில்தார் திருமலை, தச்சூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, செய்யாற்றில் மணல் கடத்திக்கொண்டு வந்த பொலிரோ வேனை திருமலை மடக்கினார். ஆனால், வேன் நிற்காமல் வேகமாகச் சென்றது. தாசில்தார் திருமலை வேனை மடக்கிப் பிடிப்பதற்கு பின்தொடர்ந்து விரட்டிச் சென்றார்.

ஆனால், மணல் கடத்தல் வேன் மெயின் ரோட்டிலிருந்து தச்சூர் சமத்துவபுரம் கிராமத்துக்குள் புகுந்தது. அங்கு வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டு இருந்த முதியவர் நடேசன் மீது மோதி அவரை நூறு மீட்டர் தூரம் இழுத்துச்சென்றது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சல் போட மணல் வண்டியை நிறுத்தி வண்டியில் மாட்டியிருந்த  முதியவரின் உடலை எடுத்து போட்டுவிட்டு மீண்டும் அந்த மணல் வாகனத்தை அங்கிருந்து எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார் ஓட்டுநர்.

இதில் சம்பவ இடத்திலேயே நடேசன் பலியானர். இதுகுறித்து ஆரணி கிராம காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மணல் வேன் ஓட்டுநரை கைது செய்தது போலீஸ். அவர் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பது தெரிந்தது. ஆனால், அலெக்ஸ் மணல் கடத்தவில்லை. காலி வேனை ஓட்டிச்சென்றபோது தெரியாமல் மோதிவிட்டார் என்று போலீஸார் வழக்கு பதிந்து அவரை வெளியே விட்டுவிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆரணி தொகுதி எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரன் அமைச்சராக ஆனதிலிருந்துதான் இப்பகுதியில் அதிக அளவு மணல் கடத்தல் நடக்கிறது. மணல் கடத்தலுக்கு துணையாகவும் போலீஸ் நிற்கிறது என்கிறனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க